அமீர் கான் நடித்து வெளிவந்திருக்கும் லால் சிங் சத்தா படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் க்ருக்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று நடிகர் அமீர்கான் பேசியதை சுட்டிக்காட்டி தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அமீர்கானுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லால் சிங் சத்தா படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் க்ருக்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ”நான் லால் சிங் சத்தா திரைப்படத்தை பார்த்தேன், என் இதயத்தை கவரும் விதத்தில் இருந்தது. படத்தில் நிறைகுறைகள் இருந்தாலும், இது ஒரு நல்ல படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். அனைவரும் சென்று திரைப்படத்தை பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் ட்விட்டர் பதிவை அடுத்து அவருக்கு எதிராகவும் விக்ரம் வேதா ஹிந்தி ரிமேக்கிற்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இருப்பினும், பலரும் ஹிருத்திக் ரோஷனுக்கு ஆதரவாகவும், லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவாகவும் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.