லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூலை வாரிக்குவித்தது. அதே சமயம் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ”விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியானது.
இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு, துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றியும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்கத்தகாத காட்சிகளை படமாக உருவாக்கி உள்ளார்.
கலவரம், சட்ட விரோத செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்தல், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், மக்களைக் கொல்வதை தற்காப்புச் செயலாகக் கூறுவது, பொது அதிகாரத்தை அச்சுறுத்துவது, போலீஸ் பாதுகாப்புக்காக நீதித்துறை அதிகாரிகளிடம் பொய் சொல்வது, கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும், போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார்.
இதன்மூலம் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. லோகேஷ் கனகராஜின் படம் பொழுதுபோக்கு அம்சமாக இல்லை, மாறாக பெண்களை கொல்லும் ஒரு மனநோயாளியை போல் இயக்குனர் இப்படத்தில் பல்வேறு காட்சிகளை எடுத்துள்ளார். இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். திரைப்படத்தில் வன்முறைக்காட்சிகள் நிச்சயம் இளம்சிறார்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும்.
எனவே லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்படக்குழு மீது வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், ஆயுதச்சட்டங்களின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் லியோ படத்தை முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “லியோ படம் முழுவதும் வன்முறை காட்சிகள் மட்டுமே உள்ளது. போதைப்பொருள், ஆயுதம் என படத்தின் காட்சிகள் முழுக்க வன்முறை மட்டுமே உள்ளது. ஏற்கனவே இதுமாதிரியான எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படம் தடை செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன், “இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்டுள்ளது. இதில் எந்த முகாந்திரமும் இல்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட நீதிபதிகள், “லியோ படத்தில் எத்தனைகாட்சிகள் வன்முறையாக உள்ளது. எந்த இடத்தில் அக்காட்சிகள் வருகிறது” என கேள்வி எழுப்பினர். அத்தோடு லோகேஷ் கனகராஜ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை ஏற்க மறுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும், லியோ படத்தில் வன்முறை காட்சிகள் எங்கெங்கு உள்ளன. எத்தனை காட்சிகள் உள்ளன என்று பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாவில் வன்முறைக்காட்சிகள் அதிகரித்து வருவது குறித்து திரை விமர்சகர் சுகுணா திவாகரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, ”தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வன்முறைக் காட்சிகள் வைப்பதில் போட்டி நிலவுகிறது. உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படங்களை குழந்தைகள் பார்க்கின்றனர். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் எம்.ஜி.ஆர் காலம்தொட்டே இருந்து வருகிறது. ஆனால், அவை எல்லாம் வேடிக்கையானதாக இருக்கும். அது ரஜினி படங்களில் தூக்கலாக இருந்து வந்தாலும், இப்போது வரும் ரஜின், விஜய் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கின்றன.
வன்முறைக்காட்சிகள் அதிகம் வைப்பது அடிப்படையிலேயே தவறானது. நேரடி வன்முறைக் காட்சியை காட்டாமலும் அதை விளக்கலாம். எடுத்துக்காட்டுக்கு ஆடுகளம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தனுஷின் கேள்விக்காக பேட்டைக்காரன் கழுத்தறுத்துக்கொண்டு இறப்பது காட்டப்பட்டது. ஒரு வார்த்தையில் வன்முறை வெளிப்பட்டது. கழுத்து அறுத்து ரத்தம் சொட்டுவதை காட்டவில்லை. வன்முறையை அழகியலாக மாற்றி சித்தரிப்பதை நுட்பமாக செய்கின்றனர்" என்றார்.
தொடர்ந்து, “படத்தில் அதிகப்படியான வன்முறை திணிக்கப்படுவது, படைப்பாளிகளின் வக்கிரமான மனநிலையைத்தான் காட்டுகிறது. படைப்பாளில் எந்த அளவுக்கு சுதந்திரத்தை கேட்கின்றார்களோ, அதே அளவுக்கு பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில், வன்முறை என்பது அதிர்ச்சியானதாக இல்லாமல், சாதாரண ஒரு விஷயமாக மாற்றப்படுகிறது. போதைப்பொருட்களை எதோ, மிளகாய்த்தூள் விற்பனைப்போன்று மிக எளிதாக வன்முறையை மிகைப்படுத்துகின்றனர்.
வன்முறை இல்லாமல் வெளியாகும் குட் நைட் போன்ற ஃபீல் குட் படங்களும் வரவேற்பையே பெறுகின்றன. இன்னும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய நிறைய கதைகள் இருக்கின்றன. படைப்பாளிகள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்