நயன்தாரா மாதிரி எத்தனை நடிகர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது என்று மலையாள நடிகர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
பிரபல இயக்குனரும் நடிகருமான சீனிவாசன், மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல ஹிட் படங்களுக்கு கதை எழுதி யுள்ளார். இவர், தமிழில், லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ’’சினிமாவில் பெண்கள் சுரண்டப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் சில நடிகைகள் இணைந்து பெண்கள் திரைப்படக் கூட்டமைப்பைத் தொடங்கியுள்ளனர். அதன் சார்பாக, ’சம்பளத்தில் இருந்து பல்வேறு விஷயங்களில் பெண்கள் சுரண்டப் படுகிறார்கள்’ என்று தெரிவித்திருந்தது பற்றி கேட்டபோது, சீனிவாசன் இவ்வாறு சொன்னார்.
அவர் மேலும் கூறும்போது, ’’ஆணும் பெண்ணும் இங்கே சமமாகவே பார்க்கப்படுகிறார்கள். சம்பளம் பற்றி பேசுகிறார்கள். ஹீரோக்கள் உள்ளிட்ட நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறப்படுவதை ஏற்க மாட்டேன். மார்க்கெட் மதிப்பை பொறுத்தே நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இங்கே எத்தனை நடிகர்கள், நயன்தாராவை போல சம்பளம் வாங்குகிறார்கள்?’’ என்றார்.
நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் நடிகர் திலீப் சிக்கியிருப்பது பற்றி கேட்டபோது, ‘’அது ஜோடிக்கப்பட்ட வழக்கு. நடிகையை கடத்தும் செயலுக்கு அவர் பல்சர் சுனிலுக்கு ரூ.1.5 கோடி கொடுத்தாகச் சொல்கிறார்கள். இது நம்ப முடியாதது. நடிகர் திலீப் அந்த விஷயத்துக்காக ரூ.1.5 பைசாக கூட செலவழித்திருக்க மாட்டார்’’ என்றார்.