கொரோனாவின் தாக்கத்தால் சீர்குலைந்த திரைத்துறை: தப்பிக்குமா சிறிய பட்ஜெட் படங்கள்?

கொரோனாவின் தாக்கத்தால் சீர்குலைந்த திரைத்துறை: தப்பிக்குமா சிறிய பட்ஜெட் படங்கள்?
கொரோனாவின் தாக்கத்தால் சீர்குலைந்த திரைத்துறை: தப்பிக்குமா சிறிய பட்ஜெட் படங்கள்?
Published on

சீனாவில் ஒலிக்கத் தொடங்கிய கொரோனா இன்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால் திணறிக்கொண்டு இருக்கின்றன. தொட்டாலே பரவும் தொற்று என்பதால் மக்களை ஒன்றாக கூட விடக்கூடாது. வேறு வழியில்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அனைத்து துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பல துறைகளில் ஒன்று சினிமாத்துறை.

கொரோனாவின் பாதிப்பு தற்போது மட்டுமல்ல இந்த வருடம் முழுவதும் சினிமாத்துறையில் எதிரொலிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்கள் எப்படி மீண்டு வரப்போகின்றன என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்கின்றனர் சினிமாத்துறையினர். கொரோனாவின் தாக்கம் சிறிய பட்ஜெட் படங்களை எப்படி பாதிக்கும்?

கொரோனாவால் சினிமாத் தொழிலாளர்கள் இன்று பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் படத்தயாரிப்பு, வெளியீடு என மற்றொரு பக்கமும் அடிவாங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதுமே தியேட்டர்கள் மூடப்பட்டன.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இப்போது தொடரும் இந்த இடைவெளி சிறிய பட்ஜெட் படங்களைத் தான் பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது இன்றைய தேதிக்கு விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா குறுக்கிட்டதால் அனைத்தும் தயார் நிலையில் இருந்தும் படம் வெளியாக முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதேபோல் அஜித்தின் வலிமை, ரஜினி, சூர்யா, கமல்,விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சில படங்கள் வெளியாக தயார் நிலையில் இருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்பு திட்டமிட்ட தேதியில் முடிக்கப்படாமல் போகின்றன. இதன் விளைவு படமானது திட்டமிட்ட தேதியில் வெளியாகாது.

ஏற்கெனவே தமிழ் சினிமாத்துறையில்  சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் கொரோனா தாக்கம் இன்னும் பாதிப்புக்களை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

கொரோனா இடைவெளியால் எந்த படம் எப்போது வெளியாகும் என கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் எந்த இடைவெளியில் வெளியாகும்? வெளியானாலும் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த சினிமா விமர்சகர் பிஸ்மி,''பொதுவாக சிறிய படங்களுக்கு எப்போதும் பாதிப்பு இருக்கும். அந்த பாதிப்பு இந்த காலக்கட்டத்தில் இன்னும் அதிகரிக்கும். குறிப்பாக தியேட்டர்கள் பல நாட்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய நடிகர்களின் படங்களையே குறி வைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் போன்ற பெரிய படங்கள் எல்லாம் தயார் நிலையில் காத்திருக்கின்றன. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ஒரே நாளில் கூட பெரிய படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் சிறிய படங்கள் வெளியாவதெல்லாம் கடினமான ஒன்றுதான். உறுதியாக சிறிய படங்களுக்கு பாதிப்பு உண்டு'' என தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை சீரான பிறகு படங்களின் வெளியீட்டை சீர்படுத்த வேண்டும் என்பதும், அனைத்து தரப்பினரும் லாபம் பார்க்க வசதியாக படங்களை வெளியிட வேண்டும் என்பதுமே சினிமா துறையினரின் வேண்டுகோளாகவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com