'நடிகர் விஜய் அழைக்கும் பட்சத்தில், அவரிடம் இரு ரகசியங்களை சொல்வேன்' என்று மக்கள் மன்ற பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட ரவிராஜா கூறியுள்ளார்.
விஜய் மக்கள் மன்ற இயக்கப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் ரவிராஜா. போஸ்டர் டிசைனரான இவரை விஜயின் ரசிகர் மன்ற செயலாளராக நியமித்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். கடந்த 28 ஆண்டுகளாக, விஜயின் மக்கள் மன்றப் பொறுப்புகளில் இருந்த இவர், அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளராக பதவி வகித்து வரும் புஷ்சி ஆனந்திற்கு எதிராக செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அத்துடன் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியில் இணைந்த ரவிராஜா, புஷ்சி ஆனந்தால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்டப்போவதாக வெளியான தகவலையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த 2 விஷயங்களையும், உங்களுக்கு தெரியாத 2 விஷயங்களையும் சில ஆதாரமான போட்டோக்களையும் உங்களிடம் காண்பிக்க வேண்டும். அது விஷயமாக பேச வேண்டும். உங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவரையும், ஏ.சி.குமாரையும் காலி செய்து தருமாறு நடிகர் விஜய் தரப்பில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரவிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “விஜய் சாருடன் வேலை செய்றவங்கள பத்தி நான் சில ஆதாரங்களை வைத்திருப்பதாக சொன்னேன். அந்தக் கோபத்தில் நான் எழுதிய கடிதத்தை விஜயிடம் கொடுக்காமல், காவல்நிலையத்தில் புகார் அளித்து, எனது 28 வருஷ உழைப்பை வீணாக்கி, வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். என்னை வேலை விட்டு நீக்கியது எனக்கு பிரச்னையாக தெரியவில்லை. வீட்டை காலி பண்ணச் சொல்லி தளபதியே சொன்னதுதான் என்னை வருத்தமடைய செய்துவிட்டது. பார்ப்போம், தளபதி கூப்பிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.