தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. 23.7 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான இந்தப் படம், சுமார் 284.72 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி, திரைப்பட வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது.
இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். சுமார் 5 பாகங்களாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், 13 வருடங்களுக்குப் பிறகு ‘அவதார் 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 16-ம் தேதி, டால்பி பிரீமியம் 4k உடன், 3D தொழில்நுட்பத்தில், உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது.
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) என்ற பெயரில் வெளியான இந்தப் படம், 6 நாட்களில் சுமார் ரூ. 4,500 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. மேலும் உலக அளவில் வசூலில் 3-வது இடத்தை இந்தப் படம் பிடித்திருந்தது. வசூலில் சாதனை செய்யாவிட்டால் அடுத்தடுத்த சீக்குவல்களை வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். எனினும், வசூலில் சாதனை செய்திருந்தது ‘அவதார் 2’.
‘அவதார் 2’ படத்தை தொடர்ந்து ‘அவதார் 3’ அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டு 20-ம் தேதி வெளியாவதாக இருந்த ‘அவதார் 3’ திரைப்படம் 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளத. இதேபோல் ‘அவதார் 4’, 2026 டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து டிசம்பர் 21, 2029-க்கும, ‘அவதார் 5’ திரைப்படம் டிசம்பர் 22, 2028-லிருந்து 19, 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு சிறப்பான தரத்தில் படத்தை கொடுப்பதற்கு காலம் எடுக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜான் லாண்டாவ் தெரிவித்துள்ளார். ‘அவதார்’ சீக்குவல்கள் மட்டுமின்றி ‘கேப்டன் அமெரிக்கா’, ‘தண்டர்போல்ட்ஸ்’, ‘பிளேடு’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்டப் படங்களின் சீக்குவல்களும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்களின் கில்டு அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.