111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் சாகச பயணத்தை தொடங்கினர். 13 ஆயிரம் அடி ஆழத்தில் இரண்டாக உடைந்து கிடக்கும் டைட்டானிக்கை காண பயணம் மேற்கொண்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே நீர்மூழ்கிக் கப்பலுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. நீர்மூழ்கி கப்பலானது நீருக்கு அடியே 96 மணி நேரம் வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால், ஐந்து பேரையும் உயிருடன் மீட்பதற்கான பணிகள் தொடங்கின.
நீர்மூழ்கிக்குள் ஆக்சிஜன் நேற்றுடன் தீர்ந்துவிட்டதால் உள்ளே இருந்த ஐவரும் உயிரிழந்து விட்டதாக OCEAN GATE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டைட்டானிக் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் ஆயிரத்து 600 அடி தொலைவில் அந்த நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CATASTROPHIC IMPLOSION காரணமாக நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது. கடலின் மேல்மட்டத்தில் ATMOSPHERIC PRESSURE ஒரு சதுர அங்குலத்திற்கு 14.7 பவுண்டாக இருக்கும் நிலையில், ஆழ்கடலில் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கலத்திற்கு 6 ஆயிரம் பவுண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறக்குறைய நூறு வருடங்கள் கழித்து டைட்டானிக் மூழ்கிய இடத்தில், அதேபோன்ற சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சி அளிப்பதாக கடந்த 1997-ம் ஆண்டு ‘டைட்டானிக்’ படத்தை (இந்தப் படம் பற்றி ஆய்வு செய்வதற்காக 33 முறை டைவ் அடித்து உள்ளே சென்று டைட்டானிக்கை பார்த்து உள்ளார் என்றுக் கூறப்படுகிறது) இயக்கிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்ததாக தெரிவித்துள்ள இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், தான் அது குறித்து முன்பே பேசியிருக்கவேண்டும் என இப்போது உணர்வதாக கூறியுள்ளார். மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு உடல் கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தபோதே தனக்கு அதைக் குறித்து சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அது மோசமான யோசனை என தான் எண்ணியதாக கூறியுள்ள ஜேம்ஸ் கேமரூன், தான் அது குறித்து பேசியிருக்கவேண்டும் எனவும், எனினும், அந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியவர் தன்னை விட புத்திசாலியாக இருந்திருக்கலாம் என்று எண்ணியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தான் அதுபோன்ற தொழில்நுட்ப சோதனைகள் செய்ததும் இல்லை என்றும், நீர்மூழ்கி கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களை விட இந்த விபத்தில் இறந்தவர்கள் மிக கொடூரமான வலியை அனுபவித்து இருப்பார்கள் என்றும் கடைசி தருணங்களில் 20 மில்லி விநாடிகளுக்குள் ஐந்து பேரும் உயிரிழந்து இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.