‘முதல் மரியாதை’ முதல் ‘லவ் டுடே’ வரை... சினிமாவில் கவனம் ஈர்த்த காதல், அன்றும் இன்றும்!

துப்பாக்கி தோட்டக்களே படத்தின் வெற்றியை முடிவுசெய்கிறது என்று இன்று சில இயக்குநர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இல்லை, துப்பாக்கியோ தேவையற்ற சண்டை காட்சிகளோ இல்லாமல் காதலை மட்டுமே மையமாக வைத்தும் ஹிட் கொடுக்க முடியும். அப்படியான சில படங்கள், இங்கே...
வசூலை வாரிக்குவித்த காதல் படங்கள்
வசூலை வாரிக்குவித்த காதல் படங்கள்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - புனிதா பாலாஜி

மவுனத்தின் மொழியில் இரு உயிர்கள் உரையாடினால், அது காதல்…

உரையாடகள் தடைபட்ட இடத்தில் மவுனங்கள் மொழியானால், அதுவும் காதல்தான்…

உயிர்களை உருவாக்கியதும் காதல்தான்..

இவ்வுலகமே உருவானதும் காதலால்தான்..

காற்றைப் போல பிரபஞ்சப் பெருவெளி எங்கும் பரவிக்கிடக்கும் காதல், சினிமாவின் தவிர்க்க முடியாத கருவி.

கோடிக்கணக்கிலான பொருட்செலவில் ஏராளமான திரைநட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு சில ஃபீல் குட் காதல் படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. அப்படி தமிழ் சினிமாவில் ஹிட் ஆன முக்கிய திரைப்படங்கள் மற்றும் அதன் மீதான சில விமர்சனங்களை காதலர் தினமான இன்று, இங்கே பார்ப்போம்.

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் 2022-ல் வெளியானது லவ் டுடே. டிஜிட்டல் காலத்து காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இயக்குநரே ஹீரோவாக நடித்தார். இரு முக்கிய படங்களை போட்டியாக கொண்டு களமிறங்கிய லவ்டுடே திரைப்படத்துக்கு ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் உள்ளங்கையின் மறுவுறுவாய் மாறிப்போன ஸ்மார்ட்ஃபோன் இளைஞர்களின் வாழ்விலும், மனஓட்டத்திலும் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, அதனால் உருவாகும் பாதிப்புகள் என்ன என்பதை கொஞ்சம் டாக்ஸிக்கான நகைச்சுவை கலந்த திரைக்கதையுடன் திரைப்படம் செய்திருப்பார், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

லவ் டுடே திரைப்படம்
லவ் டுடே திரைப்படம்

படத்தில் நிறைய மைனஸூம் உண்டு. உதாரணமாக , ‘மாமாக்குட்டி’ போன்ற ஹீரோயினை மையப்படுத்திய தாக்குதல்கள், பெண்களிடம் ஃபேக் ஐடி மூலம் ஆபாசமாக பேசியது மற்றும் புகைப்படங்கள் பெற்றது என கிரிமினல் குற்றமிழைத்த ஹீரோவுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாதது / அதை நார்மலைஸ் செய்துவிட்டு அடுத்த காட்சிக்கு நகர்வது, ஹீரோ தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச அரட்டை அடிப்பதை எவ்வித குற்றமும் இல்லாமல் பொதுப்படுத்தி காட்டுவது... - என நிறைய பிரச்னைகள் உள்ளன. ஆனால் சிறு பட்ஜெட் படமாக வந்து, மேக்கிங் மற்றும் திரைக்கதை மூலம் வசூலில் கவனம் பெற்றார் பிரதீப் ரங்கநாதன்.

படத்தின் வெற்றிக்கு நட்சத்திரங்கள் தேவையில்லை, பெரும் விளம்பரங்கள் தேவையில்லை, கவனத்தை கவரும் கதை இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாகிவிட்டது, லவ்டுடே.

வசூலை வாரிக்குவித்த காதல் படங்கள்
Lover Movie Review | இக்கால இளசுகளின் காதலை பிரதிபலிக்கிறதா லவ்வர்..!

96

லவ் டுடே 2கே கிட்ஸ் காதல் என்றால், 90ஸ் கிட்ஸ்களின் காதலாக 2018-ல் வெளியானது 96 திரைப்படம். பிரேம் குமாரின் இயக்கத்தில் உருவான இந்த காதல் கதை த்ரிஷாவின் கம்பேக் திரைப்படம் எனலாம். நம் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத ஒரு காலகட்டம் என்றால், அது பள்ளி நாட்கள்தான். அந்த பள்ளி காலத்தில் உருவாகும் காதலை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.

96 திரைப்படம்
96 திரைப்படம்

அப்படி, பள்ளிக்காதலால் பாதிக்கப்பட்ட ஹீரோ காதலியின் நினைவில் கானகத்தைச் சுற்றித்திரியும் ஃபீல் குட் திரைப்படமாக வெளியானது லவ் டுடே. கதையும், திரைக்கதையும் அத்தனை எதார்த்தமாக இருந்ததால், ரசிகர்கள் தங்களின் வாழ்வோடும், பள்ளி நினைவுகளோடும் தங்களை எளிதில் பொருத்திக் கொண்டார்கள். உறவுகள், நண்பர்கள் என ஓராயிரம்பேர் சுற்றி இருந்தாலும், தான் விரும்பும் ஒரு பெண்ணால் என்ன மாயம் நிகழ்த்த முடியும் என்பதை திரைக்கதை மூலம் காண்பித்திருப்பார் இயக்குநர்.

விண்ணைத்தாண்டி வருவாயா

த்ரிஷா 96ல் மட்டுமல்ல மற்றொரு திரைப்படத்தில் காதல் தேவதையாக ஜொலித்திருப்பார். அது கவுதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. 96 த்ரிஷாவுக்கு கம்பேக் திரைப்படம் என்றால், 2010ல் வெளியான VTV, சிம்புக்கு கம்பேக் திரைப்படம் ஆனது.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்

சினிமாவை எதிர்காலமாக கொண்ட ஹீரோ, சினிமா பார்க்கவே பிடிக்காத ஹீரோயின்… இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் வேறு. இப்படி அனைத்து முரண்களும் சந்திக்கும் புள்ளியில் உருவானது கார்த்திக், ஜெஸ்ஸியின் காதல்… சேரத்துடிக்கும் ஹீரோவாக சிம்புவும், பிரிய முடியாமல் தவிக்கும் ஹீரோவாக த்ரிஷாவும் இதில் ஒரு மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். காட்சிகளில் கவுதம் காதல் செய்திருப்பார் என்றால், அந்த காதலுக்கு தன் இசையால் அழகைக் கூட்டி அரவணைத்திருப்பார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இயற்கை

காதலில் கொஞ்சம் கமர்ஷில் கலந்து உருவான திரைப்படங்களின் வரிசையில், எதார்த்த படைப்பாக இதயங்களை நிறைத்தது இயற்கை. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை காலம் முழுவதும் நினைவு கூற இந்த ஒரு திரைப்படம் போதும். புயல் வீசும் கடலில் உலகம் முழுவதும் கப்பலில் பயணிக்கும் ஒரு இளைஞன், காதலில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கும் வலியின் கதைதான் இயற்கை…

இயற்கை திரைப்படம்
இயற்கை திரைப்படம்

வாழ்வின் தத்துவங்களை எல்லாம் போகிற போக்கில் வசனங்களாக வடித்திருப்பார், எஸ்.பி ஜனநாதன். நம்பிக்கையை நினைவாக கொடுத்துவிட்டுச் சென்ற கப்பல் கேப்டனுக்காக காத்திருக்கும் ஹீரோயினை காதலிக்கிறார் ஹீரோ… காதல் கைகூடும் கடைசி நொடியில் காதலியின் காதலுக்கு மதிப்பு கொடுத்து விடைபெறும் க்ளைமேக்ஸ்... அத்தருணத்தில் கண்டவர்களின் இதயங்களில் எல்லாம் சுமை ஏற்றியிருப்பார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

வசூலை வாரிக்குவித்த காதல் படங்கள்
ஸ்வஸ்திக் சின்னம்,நாஜிக்களின் உடல்மொழி; பாசிசத்தை பிரதிபலிக்கும் அனிமல் எனும் அபாயம்! மனிதம் எங்கே?

காதல்

காதல் என்றால் ரொமான்ஸ் மட்டும்தானா? அது பொதுசமூகத்துடன் தொடர்புடைய ஒரு விவகாரம் என காதல் திரைப்படம் மூலம் கதைபேசியிருப்பார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். பரத், சந்தியா நடிப்பில் 2004ஆம் வெளியான இத்திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டது. பாரம்பரியம், பண்பாடு என பின்பற்றப்படுபவைகளை உடைப்பதுதானே காதலின் சிறப்பு… பணக்கார வீட்டு பெண்ணும், ஏழை இளைஞனும் சாதி, பேதங்களை உடைத்து காதல் திருமணம் செய்து கொள்கின்றனர்…

காதல் திரைப்படம்
காதல் திரைப்படம்

பெரும் மகிழ்ச்சியுடன் சிறியதொரு வாழ்வைத் தொடங்கும் அவர்களின் வாழ்வு எப்படி சிதைந்து போகிறது என்பதே படத்தின் கதைக்களம். மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது மட்டும் காதலாகிவிடாது, மனைவியின் மனதை புரிந்து கொள்வதும் காதல் தான் என க்ளைமேக்சில் வரும் கணவர் கதாபாத்திரம் மூலம்கூட ஒரு கதைபேசி கடந்திருப்பார், இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அலைபாயுதே

திரைப்படங்களில் வரும் ஹீரோ, ஹீரோயின்களைப்போல் தம்மை கற்பனை செய்வது, பொதுவாக ரசிகர்கள் செய்யும் வழக்கமான ஒன்று. ஆனால், திரைப்படத்தில் வரும் சம்பவங்களை நிஜ வாழ்விலும் செய்துபார்க்கும் தாக்கத்தை ஒரு சில படங்களே ஏற்படுத்தியுள்ளன. அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம், அலைபாயுதே.

அலைபாயுதே திரைப்படம்
அலைபாயுதே திரைப்படம்

மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் சினிமாக்களில் அலைபாயுதே ஒரு முக்கிய திரைப்படம். இதை, இரண்டாயிரமாம் காலகட்டத்தின் ட்ரெண்ட் செட்டர் திரைப்படம் எனலாம். கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞன், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அது குடும்பத்துக்கு தெரியவந்த நிலையில், வீட்டை விட்டுப்பிரிந்து புது வாழ்வைத் தொடங்குகிறார்கள்.

காதல் செய்யும்போது இருந்த அன்பின் நெருக்கம், திருமணத்துக்கு பின்னும் தொடர்கிறதா? காதலுக்கும், திருமணத்துக்கு இடையே உள்ள சிக்கல்கள் என்ன, அதில் ஏற்படும் அன்றாட பிரச்னைகள் என்ன? உரையாடல்களால் ஏற்படும் மனக்கசப்புகள், உறவில் விரிசலாக மாறுவது எப்போது? என்பதையெல்லாம் தன் திரைக்கதையால் அழகாகச் சொல்லிக் கடந்திருப்பார், இயக்குநர் மணிரத்னம். காதலில், பேச வார்த்தைகளின்றித் தவிக்கும் இடங்களில் எல்லாம் தன் இசையை இட்டு நிரப்பியிருப்பார், ஏ.ஆர்.ரகுமான்

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை திரைப்படம்
காதலுக்கு மரியாதை திரைப்படம்

அலைபாயுதே ட்ரெண்ட் செட்டர் என்றால், 1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு க்ளாசிக் லவ் ஸ்டோரி. இதில் கண்களால் காதல் மொழி பேசியிருப்பார், ஹீரோயின் ஷாலினி. ஹீரோ அவரது வீட்டின் செல்லப்பிள்ளை. ஹீரோயின் அவரது வீட்டின் மகாராணி. இவ்விருவரையும் காதல் இணைத்து வைக்கிறது. ஆனால், குடும்பம் அதற்கு தடையாக இருக்கிறது. ஆசையாய் வளர்த்த குடும்பத்தையும் பிரியாமல், காதலையும் கைவிடாமல், இருவரும் கரம்கோர்த்தார்களா என்பதை இயல்பாக படமாக்கியிருப்பார் இயக்குநர்,ஃபாசில்..

காதல் கோட்டை

உண்மைக் காதல், ஒருதலைக் காதல், இறுதிவரை சொல்லாத இதயம் முரளியின் காதல் கதைகளைப் பார்த்திருப்போம். ஆனால் பார்க்காமலே காதல் செய்த ஒரு ஹிட் படம் என்றால், அது காதல் கோட்டைதான். இது, 90 காலகட்டத்தின் மற்றுமொரு க்ளாசிக் திரைப்படம். இப்படியும் படம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருப்பார் இயக்குநர் அகத்தியன்.

காதல்கோட்டை திரைப்படம்
காதல்கோட்டை திரைப்படம்

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அன்பில் பிணைந்த இரு இதயங்களை இணைக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு. அந்த மாயத்தை தன் திரைப்படத்தால் சினிமாவாக்கியிருப்பார் இயக்குநர். அருகாமையும் அணைப்பும் மட்டுமல்ல, துயரும், தொலைவும் காதலுக்கானது என்பதைச் சொன்ன காதல் கோட்டை, ரசிகர்களின் இதயங்களின் இன்றுவரை அழியாமல் இருக்கிறது.

முதல் மரியாதை

காதல் திருமணத்தை தீர்மானிக்கும், ஆனால் ஒரு திருமணத்தால் என்றும் காதலை தீர்மானிக்க முடியாது. சடங்குகளுக்கு அப்பாற்பட்ட காதலை வைத்து, முதல் மரியாதை திரைப்படத்தின் புதுக்கதை பேசியிருப்பார் பாரதி ராஜா.

முதல் மரியாதை திரைப்படம்
முதல் மரியாதை திரைப்படம்

திருமணத்திற்கு பின் தம்பதிக்குள் இருக்கும் முரண்கள், அது தொடர்பாக எழும் விவாதங்கள்... இவை அனைத்தையும் தாண்டி அந்த கணவனை வேறொரு இடத்திலிருந்து வரும் ஒரு காதல் சேர்த்து அணைத்துக்கொள்கிறது. திருமணம் செய்துகொண்ட ஒரு நபரை காதல் கொள்ளும் ராதாவின் கதாபாத்திரத்தை அத்தனை நேர்த்தியாக வடிவமைத்திருப்பார், பாரதிராஜா. இதில் இணைந்த இசைஞானி இளையராஜா ஒவ்வொரு காட்சிக்கும் தன் இசையால் உயிர் கொடுத்திருப்பார்.

இதயம்

பார்க்கா காதலின் வரிசையில் சொல்லாத காதலுக்குச் சொந்தக்காரர் முரளி… காதலிக்கலாம், ஆனால் தான் காதலிக்கும் பெண்ணுக்கே தெரியாமல் காதலிக்கும் கதை இது.

இதயம் படம்
இதயம் படம்

கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது அந்த உணர்வு மாறிவிடும். அன்பு, முத்தம், அணைப்பு என ரொமான்ஸ்களுக்கு அப்பால் பார்வையிலேயே காதல் செய்த இதயம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தனித்துவமானது.

இவ்வரிசையில் இன்னும் சில திரைப்படங்களும் உண்டு. உங்களுக்கு தெரிந்த சில படங்களை, கீழுள்ள கமெண்ட் மூலம் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்...

பூமியின் மீது காதல் கொண்ட நிலவால் நில்லாமல் சுழல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..?

கரையின் மீது காதல் கொண்ட அலையால் ஓயாமல் ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யும் ?

தோற்றாலும்,துவண்டாலும் மீண்டும் காதல் செய்வதைத் தவிர மனித இனத்தால் வேறு என்ன செய்துவிட முடியும்…?

காற்றையும் கடலையும் போல் காதலையும் நிறுத்த முடியாது…

இந்த காதல்தான் எத்தனை வசீகரமானது…!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com