கொரோனா விழிப்புணர்வு குறித்தும் அதற்கான ஒரு சித்த மருத்துவமுறை குறித்தும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் போன்றவைகளை மூடக்கோரி
அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்படும் என்ற போதிலும் இத்தகைய இடங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள்
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதனிடையே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு
சேர்ந்து நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒரு விழிப்புணர்வு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பற்றிதான் இப்போது உலகம் முழுவதும் பேச்சு. அவ்வளவு பயங்கரமானதா? சீரியசானதா? என்றால் அதற்கான பதில் ஆமாம் என்பதுதான். இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல; உலகத்தில் உள்ள பல நாடுகளின் பொருளாதாரமும் அடிவாங்கி இருக்கு. அரசு 15 நாட்கள் எல்லாவற்றையும் மூடிவிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இதில் என்ன பிரச்னை? நிச்சயமாக பிரச்னை இருக்கு. இந்தக் கொரோனா வைரஸ் வியாதிக்கு இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அரசுதான் 15 நாட்கள் விடுமுறைவிட்டுவிட்டாங்களே என்று ஜாலியாக இருக்காதீங்க. பாதுகாப்பாக இருங்க. மத்திய அரசின் சித்தமருத்துவ துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் சொன்ன முறைபடி தினமும் இரண்டு வேலை மொத்தம் 14 நாட்கள் 60 மில்லி லிட்டர் நிலவேம்பு நீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். இது எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். அப்படி என்றால் பயப்பட வேண்டுமா என்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால் பயங்கரப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.