ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி எழுதிய கற்பனை நாவலான “பொன்னியின் செல்வனில்” வரும் பல கதாபாத்திரங்கள் நம்மில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். வீரம் செறிந்த ஆதித்த கரிகாலன் பாத்திரம் சிலருக்கு பிடிக்கும். சோழப் பேரரசை ஆண்ட மன்னன் என்பதால் அருண்மொழிவர்மனை சிலருக்கு பிடிக்கும். நயவஞ்சகத்தில் தன்னிகரில்லாத கற்பனை கதாபாத்திரமான நந்தினியை சிலருக்கு பிடிக்கும். அறிவுக் கூர்மையால் அரசாட்சியை தீர்மானித்த குந்தவையையும் சிலருக்கு பிடிக்கும். பரிசுத்தமான ஒரு தலைக் காதலை வெளிக்காட்டிய மணிமேகலையை சிலருக்கு பிடிக்கும். ஆனால் பொன்னியின் செல்வனை படித்தவர்களுக்கும், இனி அதை படமாக பார்க்க போகிறவர்களுக்கும் “வந்தியத் தேவன்” கதாபாத்திரத்தைத் தான் எல்லாவற்றையும் விட அதிகமாக பிடிக்கும். கதை துவக்கம் முதல் இறுதிவரை அவனுடன் கதை மட்டுமல்ல, நாமும் ஒன்றி பயணிக்கும் அளவுக்கு “மிக மிக அழுத்தமான கதாபாத்திரம்” அது!
கதையில் வந்தியத்தேவன் யார்?
வள்ளல் பரம்பரையாக திகழ்ந்து வறியவர் நிலைக்கு தள்ளப்பட்ட வாணர் குலத்தின் இளவரசன்தான் வந்தியத்தேவன். சோழர் குலத்தின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் நண்பனாக கதையில் அறிமுகமாகி, பழுவேட்டரையருக்கு எதிரியாகி, நந்தினிக்கே டிமிக்கி கொடுத்த கில்லாடியாகி, குந்தவையின் உள்ளம் கவர்ந்த காதலனாகி, அருண்மொழிவர்மனை சோழ அரியணை நோக்கி நகர்த்தும் சூத்திரதாரி கதாபாத்திரம்தான் வந்தியத் தேவனுடையது. புயலைப் பார்த்து பதறி ஓடும் மனித இயல்புக்கு மத்தியில், சுழன்றடிக்கும் புயலுக்கு நடுவே ஆழ்கடலில் நீச்சலடித்து அதை ரசிக்கும் வந்தியத்தேவனை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? பழுவேட்டரையரின் பாதாளச் சிறையில் இருந்து தப்பித்து, குந்தவையில் இதயச் சிறையில் சிக்கியவரை அவ்வளவு எளிதில் கடக்க முடியுமா?
நந்தினியிடம் மயங்காத ஒரே கதாபாத்திரம்:
பொன்னியின் செல்வனில் வரும் ஆண்மகன்கள் பலரை தன் கண்களாலேயே வீழ்த்தும் வல்லமை படைத்தவள்தான் நந்தினி. ஆதித்த கரிகாலனை காதல் வலையில் வீழ்த்திய, முதுமையில் விளிம்பில் இருந்த பழுவேட்டரையரை மோகம் கொள்ளச் செய்து திருமணம் செய்த, தன்னை பார்க்க வரும் ஆண்களிடம் சில விநாடிகள் பேசி அவர்களை முழுவதும் ஆட்கொள்ளும் நயவஞ்சக பாத்திரம்தான் நந்தினி. ஆதித்த கரிகாலனிடம் நந்தினி குறித்த காதல் கதையை கேட்டு மனதளவில் வருந்திய பல்லவ இளவரசன் பார்த்திபனையும் சில வார்த்தைகளில் சாய்த்து தன் பக்கம் வரச் செய்து விடுவாள் நந்தினி. ஆனால் அந்த நந்தினியிடம் ஒருமுறை அல்ல, பல முறை பேசிய போதும், தனிமையில் சந்தித்தபோதும், மோகம் கொள்ளச் செய்யும் வகையில் அவள் பேசிய போதும் ஆணித்தரமான உறுதியுடன் நின்ற கதாபாத்திரமல்லவா வந்தியத்தேவனுடையது! ஒரு கட்டத்தில் எவ்வளவு பேசியும் பிடிகொடுக்க மறுக்கிறானே என்று வந்தியத்தேவனைப் பார்த்து நந்தினியே பொறாமைப்படுவாள். இது ஒன்றே போதுமே! காலம் முழுவதும் வந்தியத் தேவனை கொண்டாடித் தீர்க்க!
குந்தவையுடன் ஒரு மதில்மேல் பூனை காதல்:
சோழ இளவரசியும் தனது ஆருயிர் நண்பர் ஆதித்த கரிகாலனின் தங்கையுமான குந்தவையும் வந்தியத் தேவனும் சந்திக்கும் காட்சிகள் நாவலில் குறைவாகவே வரும். ஆனால் அப்போது கடமையும் தவறக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இருவரும் உதிர்க்கும் காதல் மொழி நாவலின் தவிர்க்கவே முடியாத அழகிய தருணம் ஆகும். “மறுபடியும் சந்திப்போம் என்று சொல்லாதீர்கள்” என்று வந்தியத்தேவன் கூற, “ஏன்?” என்று கேட்பாள் குந்தவை. “விட்டு பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனதை விட்டு ஒரு கணமும் அகலவில்லை அல்லவே!” என்பான் வந்தியத்தேவன். இது காதலை இருவரும் பகிர்ந்தபின் பேசிய வார்த்தைகள் என்று நினைக்கிறீர்களா? இல்லை! குந்தவையை முதன்முதலாக பார்க்கும்போது வந்தியத்தேவன் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. அந்த அளவுக்கு காதல் ஆறு “கடமை” எனும் அணையை தாண்டி பாய்ந்திருக்கும். எல்லோரையும் சந்தேக எல்லைக்கு வெளியே நிறுத்தும் குந்தவை “இவரை பூரணமாக நம்பலாம்” என்று ஒருவரைப் பற்றி எழுதுவாள். அந்த ஒருவர் வேறு யாருமல்ல! வந்தியத்தேவன்தான்! அதுவும் அவர்கள் முதல் சந்திப்பில்தான் நிகழும்.
மணிமேகலையின் மனதுடன் மக்கள் மனதையும் வென்றவர்:
கதையின் இறுதி அத்தியாயத்தில் அறிமுகமாகி, இறுதிவரை நம் உள்ளம் விட்டு அகலாது இருக்கும் கதாபாத்திரம் மணிமேகலை உடையது. நந்தினி உட்பட எல்லோரையும் எளிதாக புறந்தள்ளும் வந்தியத்தேவனை கள்ளம் கபடமற்ற காதலால் கலங்கடித்து இருப்பாள் மணிமேகலை. கதை நிறைவடையும்போது, சோழ அரியணையில் வந்த சிக்கல்கள் தீர்ந்தபின் நிம்மதியை தேடி வந்தியத்தேவன் ஒரு இடத்திற்கு வந்து அமர்வார். அது மணிமேகலைக்கு சொந்தமான இடம். அங்குதான் கதையும் முழுமையாக நிறைவடையும். ஆர்ப்பாட்டங்களோடு சென்ற வந்தியத்தேவன் வாழ்க்கை ஆசுவாசுப்படுத்திக் கொள்ளும் இடம் அது. மிக உயர்நத இடத்திற்கு வந்தியத் தேவன் பாத்திரத்தை உயர்த்தும் இடமும் அதுவே., தூய அன்பிற்கு வந்தியத் தேவன் தரும் உச்சபட்ச மரியாதைமிக்க அந்த தருணம் நம் இதயங்களை கணக்கச் செய்துவிடும்.
உண்மையிலேயே வந்தியத்தேவன் யார்?
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட வந்தியத்தேவனை, வாணர் குல இளவரசாகத்தான் கல்கி காட்டியிருப்பார். எல்லா செல்வங்களையும் இழந்து, கொடுக்க மனம் இருந்தும் கொடுக்க ஏதும் இல்லாத வள்ளல் குலமாக அதை அவர் உருவகப் படுத்தியிருப்பார். ஆனால் வரலாறு வந்தியத்தேவனைப் பற்றி என்ன சொல்கிறது? கீழைச் சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவன் வந்தியத்தேவன் என சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது கீழைச் சாளுக்கிய தேசத்திற்கும் சோழ தேசத்திற்கும், மிகப்பெரிய நட்புறவு நீடித்தது. பெண் கொடுத்து பெண் எடுக்குமளவு நெருக்கமான உறவும் நீடித்தது என்பதால் வந்தியத்தேவன் சோழ தேசத்தின் முக்கிய அங்கமாக மாறியதில் ஆச்சரியமில்லை. அருண்மொழி வர்மனான முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தளபதி வேறு யாருமல்ல., வந்தியத்தேவன்தான்! கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் படைத்தளபதியும் வந்தியத்தேவன்தான்! தஞ்சைப் பெரிய கோவிலின் கல்வெட்டில் “தமக்கையார் குந்தவை பிராட்டியின் கணவர்” என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் வந்தியத்தேவனைத்தான்!
வந்தியத்தேவனை போல் ஒரு நண்பனிருந்தால்!
தன் நண்பனின் ஓலையை சேர்க்க வேண்டும் என்பதால் உயிரையே பணையம் வைக்கும் துணிச்சல் வந்தியத்தேவனைத் தவிர வேறு யாருக்கு வாய்க்கும்! எல்லோரும் ஒரு செயலைச் செய்ய யோசிக்கும் வேளையில், சமயோசிதமாக குறும்புத் தனத்துடன் அதை சரியாக செய்து முடிக்கும் வந்தியத்தேவனை “பொன்னியின் செல்வனின்” ஆன்மா என்றே சொல்லலாம். வந்தியத்தேவன் போல ஒரு நண்பன் இருந்தால் சோழ சிம்மாசனமும் உங்கள் வசம் வந்துசேரும் என்பது கல்கி சொல்லாமல் விட்ட சேதி!
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் அப்படிப்பட்ட உன்னத கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி, வேறொரு கதாபாத்திரத்தை பற்றி படத்தின் முதல் பாடலான “பொன்னி நதி” வெளியீட்டு விழாவில் பேசியிருப்பார். அது நடிகர் ஜெயராம் ஏற்று நடிக்கும் “ஆழ்வார்க்கடியான் நம்பி” கதாபாத்திரம். படத்தின் டீசரில் வெறும் 1 விநாடி கூட காட்டப்படாத போதிலும் பலரும் சிலாகித்து நம்பி பாத்திரத்தின் படத்தை பகிர்ந்தனர். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்த பாத்திரம்!? ஏன்? தொடரின் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
புதிய தலைமுறை இணையதளத்தில் பொன்னியின் செல்வன் தொடர் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. முந்தைய பாகங்களை படிக்க: