“நீதிமன்றத்தை நீங்கள் சரியாக மதிப்பதில்லை.. அனுமதிக்க முடியாது”- லிங்குசாமிக்கு உயர்நீதிமன்றம் கெடு..!

“நீதிமன்றத்தை நீங்கள் சரியாக மதிப்பதில்லை.. அனுமதிக்க முடியாது”- லிங்குசாமிக்கு உயர்நீதிமன்றம் கெடு..!
“நீதிமன்றத்தை நீங்கள் சரியாக மதிப்பதில்லை.. அனுமதிக்க முடியாது”- லிங்குசாமிக்கு உயர்நீதிமன்றம் கெடு..!
Published on

இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் தங்களது கடனின் ஒரு பகுதியை 2 வாரத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரும் தங்களது ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில்  தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இந்தக் கடனை உரிய முறையில் திருப்பி தராததால் இவர்கள் மீது 2015-ஆம் ஆண்டு நிதி நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த நேரத்தில் இவர்கள் மொத்தக் கடனில் 30 லட்ச ரூபாயை திருப்பி செலுத்தினர். அத்துடன் மீதமுள்ள தொகையை 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் திருப்பி செலுத்துவதாக தெரிவித்தனர். எனினும் அதற்கு பிறகு இவர்கள் கூறியது போல கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது நிதி நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 29-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நவம்பர் 4-ஆம் தேதிக்குள் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் கடன் தொகையை திருப்பி செலுத்தாது குறித்து நீதிபதி சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார். இறுதியில் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்தக் கடன் தொகையில் 10 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு லிங்குசாமி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “ 2 வாரங்களுக்குள் எங்களால் 10 லட்சம் ரூபாய் தொகையை கொடுக்க இயலாது. வேண்டுமென்றால் எங்களுக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுத்தால் 25 லட்ச ரூபாயை திருப்பி செலுத்து இயலும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “நீங்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். அத்துடன் நீதிமன்றத்தை சரியாக மதிப்பதில்லை. இதை நான் அனுமதிக்க முடியாது. எனவே நீங்கள் இரண்டு வாரத்திற்குள் 10 லட்ச ரூபாயை திருப்பி செலுத்தாவிட்டால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com