தமிழ் திரையுலக ரசிகர்களும், தெலுங்கு திரையுலக ரசிகர்களும் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வார்த்தைபோர் தொடங்கியுள்ளனர்
தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. தற்போது இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் சில ஸ்டில்களும் நேற்று வெளியாகின. இதனையடுத்து அசுரன் ரீமேக்கில் வெங்கடேஷ் சரியாக பொருந்தவில்லை என கோலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு எதிர்க் கருத்து தெரிவித்த தெலுங்கு ரசிகர்கள் தமிழ் நடிகர்களை கிண்டலடிக்க தொடங்கினர். விஜய், அஜித், விக்ரம், கமல், ரஜினி என அனைத்து தமிழ் ரசிகர்களையும் தெலுங்கு இணையவாசிகள் கிண்டலடித்தனர். ட்விட்டரில் #TeluguRealHeroes என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இதற்கு பதிலடியாக இறங்கிய கோலிவுட் ரசிகர்கள் #UnrivalledTamilActors என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். நல்ல படங்கள் பல மொழிகளில் சென்றடைய வேண்டுமென்பதே ரீமேக் செய்யப்படுவதன் நோக்கம்.
அந்தந்த ரசிகர்களுக்கு அவர்களது நடிகர்கள் பொருத்தமாகவே தெரிவார்கள் என்பதால் ட்விட்டரில் வார்த்தை போர் செய்வதெல்லாம் தேவையில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இப்படி ட்விட்டரில் பயனற்று செய்யும் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்குகளை எந்த மொழி நடிகர்களும் விரும்ப மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.