லோகேஷ் இயக்கத்திலான விக்ரம் படத்தின் தொடக்க காட்சியின்போதும், இரண்டாம் பாதியில் வரும் சிறைச்சாலை காட்சியின்போதும் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடல் பின்னணியில் ஒலித்திருக்கும்.
படம் நெடுக அனிருத்தின் பாடலும் பின்னணி இசையும் பெருமளவில் கவரப்பட்டாலும் 1995ல் வெளியான அசுரன் படத்தில் இடம்பெற்றிருந்த சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் தற்போது இளசுகளின் லூப் லிஸ்டில் இணைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
அப்படியான துள்ளலான இசையை கொடுத்தது தமிழ் சினிமாவுக்கு பல்வேறு மெலொடி பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஆதித்யன். கார்த்திக் பானுப்பிரியா நடித்த அமரன் படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதித்யன்.
அதன் பிறகு ‘நாளைய செய்தி’, ‘டேவிட் அங்கிள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தொட்டில் குழந்தை’, ‘மாமன் மகள்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ மற்றும் தெலுங்கு மலையாள படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்தவர் ஆதித்யன்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஆதித்யன் குறித்த விவரம் ஒன்றை பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பகிர்ந்திருக்கிறார்.
அதில், சாங் ரெக்கார்ட்டிங் தியேட்டரை முதல் முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே ஆதித்யன்தான். அவரது இசையில் ஓரிரு பாடல்களே நான் பாடியிருந்தாலும் அவரால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் பெரிது என ஹரிஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், தமிழ் சினிமாவுக்கு நல்ல நல்ல பாடல்களை அவர் கொடுத்திருந்தாலும் சினிமாவில் பெரிதளவில் சோபிக்காமல் சின்னத்திரை குக்கிங் நிகழ்ச்சி கூட செய்து வந்தார்.
ஆதித்யன் கிச்சன்ஸ் என்ற பேரில் அதிரடியாக சமையல் செய்தும் கலக்கினார். அவரது மறைவு செய்திக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு திரைத் துறையைச் சேர்ந்த எவரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்காதது பெரும் வேதனையை கொடுத்தது என மனம் நொந்துக்கொண்டார். இசையமைப்பாளர் ஆதித்யன் கடந்த 2017ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.