கௌதம் கார்த்தி உட்பட 18 ஹீரோகளுக்கு இப்படத்தின் கதையை நான் கூறினேன். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை என்று கூறவில்லை. ஆனால் நடிப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் தவித்தனர் என்று ஹரஹர மஹாதேவகி இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் கூறியுள்ளார்.
கெளதம் கார்த்தி மற்றும் நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ஹரஹர மஹாதேவகி. வரும் 29ம் தேதி ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதற்கான சந்திப்பு இன்று நடந்தது. அதில் கலந்து கொண்டு படக்குழுவை சார்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிக்கி கல்ராணி பேசியது:-
என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்தப் படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இது ஒரு “அடல்ட் காமெடி“ படம். இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக தான் நாங்கள் பார்க்கிறோம். படத்தில் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை. அப்படியே சில இடங்களில் வரும் டபுள் மீனிங் வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும். வல்காரிட்டி இல்லாமல் நாங்கள் எடுத்துள்ளோம். இதை அடல்ட் காமெடி என்று தான் ப்ரொமோட் செய்கிறோம். நான் ஸ்வீட் பப்ளி காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். அப்படிபட்ட காட்சிகள் இதில் ஏதும் இல்லை.
கௌதம் கார்த்திக் பேசியது :-
நான் படத்தின் கதையை கதையாக தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால், நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம்... அதனால்தான். இது அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்தப் படத்தின் கதையை கேட்டு என் அப்பா சிரித்தார். இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. என்றார்.