நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்து 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரஜினி என்றால் விண் அதிரும் வெற்றி.. ரஜினி என்றால் எனர்ஜி.. ரஜினி என்றால் ஸ்டைல்.. ரஜினி என்றால் ஆரவாரம்.. ரஜினி என்றால் பேரதிசயம்... 7 கோடி தமிழ் மக்களை காந்தமாய் ஈர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நாம் அறிந்த, அறியாத ரஜினியின் 10 ஹைலைட்ஸ் இங்கே...
* 1975ல் கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். சிவாஜிராவ் என்ற இவரது இயற்பெயரையும் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார் பாலசந்தர். ஏற்கனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் ரஜினிகாந்த் என்று மாற்றி வைத்தார் கேபி.
* ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம் 'ஜானி'. அதற்கு முன்னதாக 'பில்லா' படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ஒரு ரஜினி இறந்த பிறகுதான் இன்னொரு ரஜினி வருவார். ஆனால் திரையில் இரண்டு ரஜினிக்கள் தோன்றிய படம் ஜானி தான்.
* தனது நண்பரும், நடிகருமான கமல்ஹாசனோடு இணைந்து 16 வயதினிலே, அவள் அப்படித்தான், ஆடு புலி ஆட்டம், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சுமார் 18 திரைப்படங்கள் வரை நடித்திருக்கின்றார் ரஜினி.
* ரஜினி நடித்த ஓரே ஆங்கிலப் படமான 'பிளட் ஸ்டோன்' 1988இல் வெளியானது. ஒரு வைரக்கல் பற்றிய இந்திய அமெரிக்க வாழ் கதை இது. இப்படத்தை இயக்கி இருந்தவர் நிக்கோ மாஸ்ட்ரோகிஸ் என்ற ஆங்கில இயக்குனர்.
* ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த 'சிவாஜி' படமும், 'எந்திரன்' படமும் பல சாதனைகள் புரிந்து கோலிவுட்டில் புதிய வரலாறு படைத்தன.
* கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என எல்லா விதமான சினிமா தொழில்நுட்பகளிலும் நடித்து பெருமை பெற்றவர்.
* பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே, கலைமாமணி விருது இவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் நீண்டது.
* 1981இல் லதாவை திருமணம் செய்துகொண்டார் ரஜினி. திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
* ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சந்திரமுகி'. ரஜினி நடித்த படங்களில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் என்ற சாதனையை படைத்தது 'சந்திரமுகி'.
* ரஜினியின் ‘பாபா’ படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்ட நிலையில், முதல் நாள் ரூ.1.4 கோடியை வசூலித்தது. இந்த படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு, பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
தவற விடாதீர்: உணவகத்தில் வைக்கப்பட்ட அஜித்தின் மெழுகு சிலை! ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!