உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் தங்களது திரைப்படத்துக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5-ஐ அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவோம் என தெலுங்குத் திரைப்படக்குழு ஒன்று அறிவித்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் ஹனுமான் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியின் போது திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தின் pre-release event ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், “ராமர் கோவில் திறப்பின்போது கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளேன், எனது குடும்பத்துடன் கலந்துகொள்ள உள்ளேன். ராமர் கோவில் திறப்பினை ஒட்டி ஹனுமான் திரைப்படக்குழுவினர் முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளனர். அதன்படி திரைப்படத்துக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5-ஐ ராமர் கோவிலுக்காக வழங்க முடிவு செய்துள்ளது படக்குழு. திரைப்படக்குழு சார்பாக நான் இச்செய்தியை அறிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஹனுமான் திரைப்படத்துடன் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், நடிகர் வெங்கடேஷின் சைந்தவ், நாகர்ஜுனாவின் நா சாமி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.