சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவை ஜிப்ஸி படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. நீண்ட நாட்களாக வெளியாகாமல் தள்ளிக்கொண்டே சென்றது இந்தப்படம். ஒருவழியாக இத்திரைப்படம் இம்மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே, சர்ச்சைக்குரியது எனக் கூறி சென்சாரில் நீக்கப்பட்ட இப்படத்தின் காட்சியொன்றை ஜிப்ஸி படக்குழு நேற்று யூடியூபில் வெளியிட்டது படக்குழு. அதில், ஆதார் அட்டை, தேசிய கீதம், ஒடுக்கப்படும் எளிய மக்களின் குரல், காவல்துறையின் அதிகாரம் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ நேற்று வைரலாக பகிரப்பட்டது.
இந்நிலையில், சென்சாரில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இதில், கங்கை நதிக்கரையில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் ஒரு தலைவர் பேசுவது போல் காட்சி உள்ளது. அவர் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பிரதிபலிப்பதைப் போல் தோன்றமளிக்கிறார். அவரது பேச்சினை ஏராளமானோர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பேச்சில், “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே வாழ்க்கை இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம். இந்த கங்கையில் அதர்மத்தின் ரத்தம் கலந்து கங்கை புனிதமாகட்டும். மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணனிடம் அர்ஜூனன் கேட்டான். நான் யாரைக் கொல்லப் போகிறனோ, அவர்கள் என் சகோதரர்கள். அதற்கு கிருஷ்ண பரமாத்மா சொன்னார், அவர்களை நான் ஏற்கெனவே கொன்றுவிட்டேன். நீ கொல்லப் போவது இரண்டாவது முறைதான். இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர். புரிகிறதா” என்று உரக்க சொல்கிறார் அவர். அவர் பேச்சினை நிறுத்தியவுடன் அங்கிருந்தவர்கள் பகவான்க்கி ஜே என்று முழக்கமிடுகிறார்கள்.
முதல் ஸ்னீக் பீக்கில் இடம்பெற்றிருந்த காட்சிகள் தமிழகத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நடப்பது போன்று இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ஸ்னீக் பீக்கில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் நடப்பது போன்று உள்ளது.