சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ், தேசிய விருது கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், விருது அறிவிப்பு தமக்கு ஆச்சர்யமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சுதா கொங்கரா இயக்கிய “சூரரைப் போற்று” திரைப்படம் ஐந்து விருதுகளை வாரிக் குவித்தது. அந்த படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும், நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த திரைக்கதைக்கான விருதையும் ’சூரரைப் போற்று’ பெற்றது. ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளனர். மேலும் ’சூரரைப் போற்று’ படத்திற்கு பின்னணி இசையமைத்த ஜி.வி பிரகாஷ்குமார் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதைப் பெறுகிறார்.
முதன்முதலாக தேசிய விருதை முத்தமிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், “மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது. ’சூரரைப் போற்று’ படக்குழுவிற்கும், இயக்குநர் சுதா கொங்கராவுக்கு எனது நன்றிகள். சூர்யா சாருக்கும் என் நன்றிகள். கதைக்கு என்ன தேவையோ அதை முழுமையாக செய்தேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தோம். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்த பணிகளுக்கு இது பெரும் ஊக்கமாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.