ஒருகாலத்தில் பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் 'திரை ஜோடி'யாக வலம்வந்த ரவீனா டாண்டன், நடிகர் கோவிந்தா ஆகியோர் மீண்டும் ஒரு படத்துக்காக ஒன்றுசேர இருக்கின்றனர்.
பாலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு 90-களில் ஃபேவரைட் 'திரை ஜோடி'யாக இருந்தது பிரபல நடிகர் கோவிந்தா - ரவீனா டாண்டன் ஜோடிதான். இந்தியில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'துல்யே ராஜா', 'ஆன்ட்டி நம்பர் 1', 'பர்தேசி பாபு' போன்ற படங்கள் 90-களில் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. 'கிசி டிஸ்கோ மெய்ன் ஜெயே' மற்றும் 'அங்கியோன் சே கோலி மாரே' போன்ற இவர்கள் இருவரின் பட பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.
இந்த நிலையில்தான் இப்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்திற்காக இணையவிருக்கிறது. இதனை ரவீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கோவிந்தா உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு, கூடவே, "ஒரு மாபெரும் ரீயூனியன் நடக்கவிருக்கிறது. மீண்டும் ஒன்றாக திரையில் தோன்ற இருக்கிறோம். எங்கே? எப்போது? என்பது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த தகவல் பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. இதை அடுத்து பலர் இருவரையும் வரவேற்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர் ஒருவர், "திரை ஜோடியில் எங்களுக்கு பிடித்த ஜோடி இவர்கள். இவர்களின் போட்டோ எங்களை பழைய நியாபகங்களை அசைபோட வைத்துள்ளது. இவர்கள் மீண்டும் இணைய காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரவீனா தற்போது யஷ் நடிக்கும் 'கே.ஜி.எஃப் - 2'வில் நடித்து வருகிறார். இதே படத்தில் சஞ்சய் தத்தும் நடித்து வருகிறார். எனினும் கோவிந்தா நடிப்பில் கடைசியாக வெளியானப் படம் `ரங்கீலா ராஜா'. 2019-ல் இந்தப் படம் வெளியானது. அதன்பின் கோவிந்தா படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய படம் பற்றிய அறிவிப்பு அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.