எந்தவொரு திரைப்படம் வெளியாகும்போதும், ஏற்கெனவே வெளியான ஒரு திரைப்படத்தைப் போலவே உள்ளது என்ற விமர்சனங்கள் எழும். 2 திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம்.
இந்த வகையில், அட்லி இயக்கத்தில் உருவான ’ராஜாராணி’, ’தெறி’, ’மெர்சல்’ திரைப்படங்களின் கதை, முறையே ‘மௌனராகம்’, ’சத்ரியன்’, ’அபூர்வ சகோதரர்கள்’ படங்களின் கதையேதான் என பல ரசிகர்கள் உறுதிபட கூறுகின்றனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ’பாகுபலி’ திரைப்படம், 1969-ல் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான ‘அடிமைப்பெண்’ணின் மூலக்கதையை நினைவுபடுத்தியது.
’பாகுபலி’க்கு கதை எழுதியது, எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இதே விஜயேந்திர பிரசாத்தின் கதையில், 2015-ல் ’பஜ்ரங்கி பைஜான்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் கதை, அச்சு அசலாக, ஃபாஸில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1987-ல் வெளியான ’பூவிழி வாசலிலே’ திரைப்படத்தின் கதைதான்.
இந்தப் பட்டியலில் 'GOAT' திரைப்படமும் இணைந்திருக்கிறது. முதல்முறையாக கரம் கோர்த்துள்ள விஜய் - வெங்கட் பிரபு கூட்டணிக்கு அனைத்து மொழி ரசிகர்களும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். சிறப்பான திரைக்கதைக்காகவும் நட்சத்திரக் கூட்டத்தை திறம்பட கையாண்டு திரையரங்குகளை திருவிழாவாக்கியதற்கு, வெங்கட்பிரபுவின் டீமுக்கு பூங்கொத்துகளை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில், 'GOAT' திரைப்படத்தின் கதை, புத்தம்புதிய கதையில்லை என்கிறார்கள் திரை ரசிகர்கள்.
We Miss You Captain என்று உருகி, விஜயகாந்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கி, 'GOAT' படத்தின் முதல் காட்சியிலேயே வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதே விஜயகாந்த் நடிப்பில், 'GOAT' நாயகன் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகரன் இயக்கத்தில், 1993ல் வெளியான 'ராஜதுரை' திரைப்படத்தின் கதையை அப்படியே பயன்படுத்தி 'GOAT' திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
'ராஜதுரை' திரைப்படத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் ஆனந்தராஜை, அதிரடியாக கைது செய்து சிறையிலடைப்பார் துணிச்சலான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த்.
இதற்காக பழிதீர்ப்பதாக சூளுரைக்கும் ஆனந்தராஜ், விஜயகாந்தின் 5 வயது மகனை கடத்திச் சென்று, பிள்ளைபோல வளர்த்து, பெற்ற தந்தைக்கு எதிராக களமிறக்குவார். தந்தை ராஜதுரையாகவும் மகன் விஜய்யாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். 1993ல் இதே செப்டம்பர் மாதத்தில் வெளியான 'ராஜதுரை' திரைப்படம், அபார வெற்றி பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமின்றி ஆவரேஜ் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தின் கதையை, லேட்டஸ்ட் ட்ரெண்டுகளுடன் அப்டேட் செய்து, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சிவகார்த்திகேயன், சினேகா, லைலா, த்ரிஷா என பெரும் நட்சத்திரக்கூட்டத்துடன், குலுக்கி எடுத்து, கமர்ஷியல் காக்டெயிலாகக் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் அவர் நடித்த அத்தனை திரைப்படங்களையும் பார்த்திருப்பார்கள் என்று வெங்கட் பிரபுவுக்கு தெரியும். விஜயகாந்த் நடித்த படத்தின் கதையை, காலத்திற்கேற்ப அப்டேட் செய்து படமாக்கியதோடு, விஜயகாந்தையும் தனது படத்தில் இணைத்திருப்பதன் மூலம், தான் எவ்வளவு கில்லாடி என்பதை பதிவு செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இதுகுறித்த முழுத் தொகுப்பையும் அறிய இந்த வீடியோவை பார்க்கவும்.
இதையும் படிக்க: ’எமர்ஜென்சி’ படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.. கங்கனா அறிவிப்பு.. இதுதான் காரணமா?