சிங்கம் 3 பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரிமிங் செய்வதாக அறிவித்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை கண்டித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
சத்யம் சினிமாஸில் எமன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஞானவேல் ராஜா, ஒவ்வொரு படமும் வெளியான உடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முறை கேடாக படங்களை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். அவ்வாறு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படங்களை வெளியிடுவோர் இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து கைது செய்படுவர் எனவும் அவர் கூறினார். வரும் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கும் சிங்கம் 3 படத்தை பேஸ்புக் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரிமிங் செய்வதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்திருந்தார்கள் எனக் கூறிய ஞானவேல் ராஜா ஆவேசமடைந்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதேபோல் சினிமா துறையை மீட்டெடுக்க அனைத்து தயாரிப்பாளர்களும் கோபங்களை மறந்து ஒன்று சேர வேண்டும் என்றும், விஷால் தலைமையில் களமிறங்கவிருக்கும் புதிய அணி திருட்டு விசிடியை ஒழிக்க கடுமையான முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார். ஞானவேல்ராஜா, விஷால் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.