பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை வைத்திருந்தார். அதில் இவர்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜவுக்கு எதிராகவும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பு திரைப்பிரபலங்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து தற்போது தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிவு ஒன்றினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “ 'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை என்றைக்குமே 'அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார், நடிகர் பொன்வண்ணன், கரு பழனியப்பன் ஆகியோர் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
சசிகுமார்: “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது”
சமுத்திரக்கனி: “அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான்... எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும்.... ஆறு மாசம் பருத்திவீரன் படப்பிடிப்பிலே இருந்துருக்கேன். ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல. நான்தான் தயாரிப்பாளர், நான்தான் தயாரிப்பாளர்னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விஸ்வாசமும் இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர். தப்பில்லையா?”
எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..? பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு. அவங்களே பேசிக்குவாங்க...அவங்களே தீத்துக்குவாங்க..அப்படின்னுதான் நான் இருந்தேன் ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு...
களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத்தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல... இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான்... இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும்... இந்தமாறி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க... அதுதான் எல்லாருக்கும் நல்லது...”
கரு பழனியப்பன்: “பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம். ஆனால், பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம்.
ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை”
இயக்குநர் பாரதிராஜா: “பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..! நான் இப்போதும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்..!”
பொன்வண்ணன்: “உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக.. திருடன், வேலைதெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..!.தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து' திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!”
இவற்றைத்தொடர்ந்து தற்போது ஞானவேல் ராஜா தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.