குறைவான வசனங்களுடன், உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்டு கண்களுக்கு பரிமாறும் மகத்துவம் அறிந்தவர்கள், மலையாள சினிமா படைப்பாளிகள். அந்த விருந்தில் காட்சிகளைத் திகட்ட திகட்ட நமக்கு பரிமாறுவதில் வல்லவர் கிரிஷ் கங்காதரன். 'ஜல்லிக்கட்டு' படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்படுள்ளது. அவர் கடந்த வந்த பாதை இது...
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'நீலகாஷம் பச்சகடல் சுவன்னா பூமி' படத்தின் மூலம் மலையாள சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தார் கிரிஷ் கங்காதரன். அந்தப் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 2014-ம் ஆண்டு 'மரியம் முக்கு', 'களி', 'குப்பி' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 'குப்பி' படத்துக்காக கேரள மாநில திரைப்பட விருதுகளில் ஒளிப்பதிவுக்கான சிறப்பு ஜூரி விருதை தட்டிச் சென்றார்.
அடுத்தாக 2017-ம் ஆண்டு லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான 'அங்கமாலி டைரிஸ்’ படம் அவரது முழுத் திறமையையும் வெளிக்காட்டியது. அங்கமாலி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேம்களையும் செதுக்கியிருப்பார். அந்த மக்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு இருந்தபடியே கடத்தியதில் இவரது பங்கு மிக முக்கியமானது.
"கதை அங்கமாலியில் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றியது. இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். லிஜோ குறிப்பாக முடிந்தவரை யதார்த்தமாக காட்டவேண்டும் என நினைத்தார். இதன் காரணமாக படத்தின் சாரம்சம் குறையாமல் இருக்க படம் முழுவதும் இயற்கை ஒளியைப் பயன்படுத்தியே ஒளிப்பதிவு செய்தோம்.
எங்களிடம் லைட்டிங் யூனிட் இல்லை, ஜிப், டிராக்ஸ், டிராலி போன்ற கூடுதல் உபகரணங்கள் எதுவும் இல்லை. நாங்கள் பெரும்பாலும் கைகளால் இயக்கப்படும் கேமராக்கள் கொண்டுதான் படத்தை முடித்தோம்" என கூறும் அவரது வார்த்தைகளின் வழியே படத்துக்கு அவர் செலுத்திய உழைப்பை நம்மால் உணர முடியும்.
மேலும், 'அங்கமாலி டைரிஸ்' படத்தின் இறுதி 10 நிமிட காட்சிகள் அப்படி இருக்கும். அந்தக் காட்சிகள் மட்டுமே போதும், கிரிஷின் கேமிரா வொர்க் பற்றி விவரிக்க. கதையின் முக்கியக் கதாபாத்திரத்தை பின்நோக்கி கேமரா சென்றுகொண்டிருக்கும். ஏறக்குறைய அந்த திருவிழாவில் 1000 பேர் இருப்பார்கள். அவர்கள் யாரும் கேமராவைப் பார்த்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். அப்படி மிகுந்த சிரமத்துடன் நேர்த்தியாக அந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்திருப்பார் கிரிஷ்.
சொல்லப்போனால் 'சர்கார்' படத்தில் கிரிஷுக்கு முருகதாஸ் வாய்ப்பளித்தே 'அங்கமாலி டைரிஸ்' படத்தை பார்த்துதான் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து 'சோலோ', `ஹே ஜூடு’ `சுதந்திரியம் அர்த்தராத்திரியில்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், 2018-ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' அவருக்கு சவாலான படமாக இருந்தது. காரணம், மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கு இத்தனை கோடியில் பிரமாண்ட படம் எடுத்து பழக்கமில்லை. அதனால், 'சர்கார்' அவருக்கு முழுவதும் புதியதாக இருந்தது. குறிப்பாக விஜய் போன்ற மாஸ் ஹீரோவுடன் முதல் முறையாக இணைகிறார். எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய அவரை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.
``இதுவரை நான் பணியாற்றிய மலையாள படங்களுடன் ஒப்பிடும்போது, 'சர்கார்' எனக்கு மிகப்பெரிய படம். 'அங்கமாலி டைரிஸ்' பார்த்த பிறகு என்னுடன் பணியாற்ற முடிவு செய்த இயக்குநர், சர்க்காரில் விஜய்யின் தோற்றம் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்" என்று 'சர்கார்' படம் வெளியானபோது அவர் பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் லிஜோ ஜோடன் 'ஜல்லிக்கட்டு' படத்தில் கைகோத்தார். அது அவருக்கு மற்றோரு மைல்கல்லாக அமைந்தது.
ஓட்டம் பிடித்த எருமையுடன் கூடவே பயணித்ததைப் போன்ற உணர்வை கொடுத்திருப்பார் கிரிஷ் கங்காதரன். சிங்கிள் ஷாட்டில் பல காட்சிகளை எடுத்து மேஜிக் செய்திருப்பார். அவருடைய மொத்த உழைப்பையும் இறுதிக் காட்சியில் அடையாளம் காண முடியும். படம் ஆஸ்கர் ரேஸ் வரை சென்றதற்கு கங்காதரன் தவிரக்க முடியாத காரணமாக இருந்திருக்கிறார். 'டிஜின்', 'பீமந்தே வாஜி' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு நிச்சயம் உந்துதலாக இருக்கும்... வாழ்த்துகள் கிரிஷ்!
- மலையரசு