‘மாஸ்டர்’ விழாவில் பேசிய விஜய் சேதுபதி பேச்சு குறித்து நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்திருந்தார். அது இப்போது சர்ச்சையாக மாறி வருகிறது.
‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஜய், சாந்தணு, மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. ஏற்கெனவே ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் வைத்து விஜய்க்கு விஜய் சேதுதி கொடுத்த முத்தத்தை திரும்பிக் கொடுத்து விடலாமா என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்க, மேடையில் இருந்த விஜய் இறங்கி வந்து விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்தார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும் போது, "கடவுளுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இங்கு பலகோடி வருடங்களாக இருக்கிறது. கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எந்தவொரு கூட்டத்துடனும் தயவு செய்து பழகாதீர்கள். அது ரொம்பவே முக்கியம்.
கடவுள் மேலே இருக்கிறார். மனிதன்தான் பூமியில் இருக்கிறான். ஆகையால் மனிதனை மனிதனால் தான் காப்பாற்ற முடியும். இது மனிதர்கள் வாழுவதற்கான இடம். மனிதன் சகோதரத்துவத்துடன் சந்தோஷமாக அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழவேண்டும். மதத்தைச் சொல்லி கடவுளையே பிரிக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மதம் அவசியமில்லாதது" எனப் பேசியிருந்தார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சுக் குறித்து காயத்ரி ரகுராம் ஒரு கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மனிதனை மனிதன் நம்ப வேண்டும் என்ற கருத்து ஓகே. ஆனால் ஏராளமானோர் மத நம்பிக்கையில் இருக்கையில் அவர்களின் நம்பிக்கையை அழிக்க முடியாது. மனிதன் பொய் சொல்வான், இன்னொரு மனிதனை புறக்கணிப்பான். ஆனால், கடவுள் இதனை செய்ய மாட்டார். மனிதனுக்கு கடவுள் உதவி செய்வார், அவனை உயர்த்த கை கொடுப்பார்.
ஒரு மனிதன் மூலம்தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். ஒரு மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளைதான் நம்புவேன்” எனக் கூறியிருந்தார். இவரது கருத்தை முன்வைத்து ட்விட்டர் பக்கத்தில் விவாதம் எழுந்தது. அதையொட்டி பலரும் விஜய் சேதுபதி பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அது குறித்து மீண்டும் ஒரு விளக்கத்தை காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார். அதில், “நான் விஜய் சேதுபதி பேச்சை கண்டிக்கவில்லை. அவர் சுதந்திரமாக எதையும் பேசலாம். அது அவருடைய ஜனநாயகம். அவரது பார்வையுடன் நான் உடன்படவில்லை. இது என் சுதந்திரம். எல்லோரும் கடவுளை நம்புவதை நிறுத்த மாட்டார்கள். மதச்சார்பின்மைக்கு ஏற்ப நாத்திகர்கள் அவர் பேச்சை விரும்புவார்கள்” எனக் கூறியுள்ளார்.