குயின் இணையதள தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு உரிமையில்லை என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றனர். தன் அனுமதியில்லாமல் எடுத்த தலைவி, குயின் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவமேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் தீபா, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தன்னால் அவரை சந்திக்க முடியவில்லை என பலமுறை கூறியிருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த குயின் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எந்த உரிமையும் இல்லாமல், உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.