சில நாள்களாகக் கவுதம் மேனனின் ’கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதனைப் பாராட்டி ஒரு தரப்பினரும், அக் குறும்படத்தைக் கலாய்த்து ஒரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறும்படம் குறித்து மீம்ஸ்கள் பறக்கின்றன. கார்த்திக்-ஜெஸ்ஸியின் உறவு திருமணத்தை மீறிய உறவு எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தள ரியாக்ஷன் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் பேசியுள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், இது மக்களின் பார்வை.மற்றவர்களின் பார்வையைக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. அதேநேரத்தில் இது தார்மீகமாகவே செல்ல வேண்டுமென்பதில்லை. கார்த்திக், ஜெஸ்ஸி பிரிந்து பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தொலைப்பேசியில் எப்படிப் பேசுவார்கள் என்பதைக் காட்ட விரும்பினேன்.
இந்தப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் நாயகியை ஒரு ஆறுதலாகவே பார்ப்பதாக இருக்கும். அவளது காலடியில் வாழவேண்டுமெனச் சிம்பு சொன்னதும் தவறாக நினைத்தார்கள். அதன் அர்த்தம், நாயகியின் ஆறுதல் நிழலில் நாயகன் பாதுகாப்பு உணர்வுடன் வாழவேண்டும் என்பதுதான்.
படத்தின் இறுதியிலும் கார்த்திக் எழுதுவதாக நமக்குச் சிலவற்றைப் புரிய வைப்பார். '' சில பேர், சில பெண்கள்.. நம்மை விட்டு எப்போதும் விலகுவதில்லை'' என கார்த்திக் எழுதுவதைக் காணலாம். அதுதான் படத்தில் இயக்குநராக நாயகனின் கதாபாத்திரம் சொல்ல வருவது எனத் தெரிவித்துள்ளார்