”காந்தி அரசியல்வாதிகளுக்கிடையே ஒரு துறவியாகவும் துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும்” என்று அழுத்தமாக பேசுகிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மகான்’ காந்திய கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவதாக சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழருவி மணியனிடம் புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பேசினேன்,
‘மகான்’ பார்த்துவிட்டீர்களா?
”இன்னும் பார்க்கவில்லை. எப்போதாவது, சில நல்லப் படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் நான். ஆனால், ‘மகான்’ படத்தில் காந்தியம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். சினிமாவைப் போன்று சக்தி மிக்க ஊடகம் உலகத்தில் வேறு எதுவுமில்லை. படிப்பறியாப் பாமரனையும் எளிதில் சென்றடையும் ஆற்றல் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்த சினிமா உலகம், சமூகப் பொறுப்பற்று இயங்குவதுதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. மனிதர்களின் சிந்தனைகளைச் செழுமைப்படுத்துவதோ சமூக நலனை மேன்மைப்படுத்துவதோ இன்றைய திரையுலக பிரம்மாக்களின் நோக்கமில்லை. நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் 'மகான்கள்' இவர்கள்.”