போதைப்பொருள் வழக்கு: கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்

போதைப்பொருள் வழக்கு: கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்
போதைப்பொருள் வழக்கு: கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்
Published on

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினி, சஞ்சனா கல்ராணி இருவருக்கும் எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் வழக்கு பேசுபொருளாகியுள்ளது.

கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடகாவில் பிரபலங்களின் போதைப்பொருள் பயன்பாடு குறித்த சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர், மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட 12 பேர் அதிரடியாக கைதும் செய்யப்பட்டனர். இந்த 12 பேரில் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, மற்றொரு நடிகை ராகினி திவேதி, போதைப்பொருள் விருந்துகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விரேன் கன்னா, முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் அல்வாவின் மகன் ஆதித்யா அல்வா மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட பலர் அடக்கம்.

இதில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கிட்டத்தட்ட 3 மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமீன் வாங்கி வெளியே வந்தனர். இதனிடையே, 10 மாதங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல் அதிகாரிகள், ஹைதராபாத்தில் உள்ள மத்திய எஃப்.எஸ்.எல் ஆய்வகம் மூலம் நடத்திய தலைமுடி பரிசோதனையில் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீர் மற்றும் தலைமுடி பரிசோதனை முடிவுகளை வைத்து, சில குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட நபர் என்ன விதமான போதைப்பொருளை உட்கொண்டார் என்பதைக் கண்டறிய முடியும். அதன்படி, இருவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் மற்றும் ரத்த மாதிரி சோதனைகளில் உறுதித்தன்மை இல்லாததால், தலைமுடி பரிசோதனை நடத்த முடிவு செய்த மத்திய குற்றப்பிரிவு ஆணையம், இதற்காக இருவரிடம் தலைமுடி மாதிரிகளை அக்டோபர் 2020-ல் சேகரித்து ஹைதராபாத்தில் உள்ள எஃப்எஸ்எல் ஆய்வகத்துக்கு அனுப்பியிருந்தது.

இந்த சோதனை முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், இதில் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. இந்த முடிவுகள் போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இருவருக்கும் எதிராக வலுவான ஆதாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஆதாரங்ளை கொண்டு ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரையும் விரைவில் நேரில் அழைத்து மத்திய குற்றப்பிரிவு ஆணையம் விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரும் சிக்கலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் கமல் பந்த் இந்த வழக்கு தொடர்பாக கூறும்போது, "முதல்முறையாக தலைமுடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அறிவியல் சான்றுகளை சேகரிப்பதில் மத்திய குற்றப்பிரிவு ஆணைய குழுவின் இடைவிடாத முயற்சி மற்றும் அந்தக் குழு நடத்திய பாரபட்சமற்ற விசாரணைகளால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்கான விசாரணை குழுவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

இதேபோல், தெலங்கானா இணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல்," முதலில், தலைமுடி பரிசோதனைக்கான மாதிரிகளை ஆய்வகம் நிராகரித்தது. பின்னர் மாதிரிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. பொதுவாக, இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறியலாம். ஆனால், அந்த நேரங்களில் குற்றவாளிகளின் மாதிரிகளை சேகரிப்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதும் பெரும்பாலும் நடக்காமல் போகிறது. ஆனால், தலைமுடி மாதிரிகளில், போதைப்பொருள் தடயங்கள் ஒரு வருடம் வரை காணப்படும். இந்த முறை மூலமாக தான் தற்போது இந்த வழக்கில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com