சர்ச்சையில் சிக்கிய ‘அம்மா’.. அடுத்தடுத்து விலகும் கேரள நடிகைகள்..!

சர்ச்சையில் சிக்கிய ‘அம்மா’.. அடுத்தடுத்து விலகும் கேரள நடிகைகள்..!
சர்ச்சையில் சிக்கிய ‘அம்மா’.. அடுத்தடுத்து விலகும் கேரள நடிகைகள்..!
Published on

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி நடிகைகள் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளனர்.

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் தலைவராக கடந்த 18 வருடமாக நடிகர் இன்னசென்ட் இருந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை அடுத்து, புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார்.  நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் சிக்கியதால், அவர் ‘அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ‘அம்மா’வில் மீண்டும் நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர் இன்றுவரை ‘அம்மா’விலிருந்து விலக்கப்படவில்லை. இதனால் பல முன்னணி நடிகைகளும் ‘அம்மா’ அமைப்பிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் திலீப்பால் பாதிப்பிற்குள்ளான நடிகைதான் முதல்முறையாக அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பான அவரின் விலகல் கடிதத்தில், “ திரைத்துறையில் எனக்கு வந்த வாய்ப்புகளுக்கு பல்வேறு இடையூறுகளை அந்த நடிகர் ஏற்படுத்தினார். எனவே இதுகுறித்து ‘அம்மா’வில் நான் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் அந்தப் புகாரை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு ஒரு கடுமையான துன்பம் நேர்ந்தபோதும் கூட, குற்றவாளியை பாதுகாக்க நினைத்த ‘அம்மா’வில் உறுப்பினராகதான் இருந்தேன். இந்த அமைப்பில் மீண்டும் தொடர்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என கருதுகிறேன். அதனால் இதிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கேரள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நேரத்தில், திரைத்துறையில் உள்ள பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‘விமன் இன் சினிமா கலெக்ட்டிவ்’ (WCC) என்ற அமைப்பு உண்டாக்கப்பட்டது. சினிமா துறையில் உள்ள பல பெண்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் டபிள்யூசிசி-யூம் ‘அம்மா’வில் இருந்து விலகியுள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், இயக்குநர் கீத்து மோகன்தாஸ் ஆகியோரும் விலகியுள்ளனர்.

இதுகுறித்து கீத்து மோகன்தாஸ் கூறும்போது, “ நீண்ட காலத்திற்கு முன்னதாகவே நான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘அம்மா’வில் தலைவர்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ அதனையே அனைவரும் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் என கருதுகின்றனர். எங்கள் குரல் இங்கு எடுபடவில்லை. நான் என் தோழிக்காக நிற்கிறேன். அம்மாவின் பொறுப்பற்ற முடிவை வெளியில் இருந்து எதிர்ப்பேன்” என்றார்.

பாதிப்பிற்குள்ளா நடிகையின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் கூறும்போது, “தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மிக பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள ‘அம்மா’வின் முடிவை எதிர்ப்பதற்கே ராஜினாமா செய்துள்ளேன். என் தோழி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ‘அம்மா’ அதற்கு எதிற்கு எதிராக மனிதத்தன்மையற்ற முடிவை எடுத்துள்ளது. ஒரு நல்ல மனிதராக இருப்பதையே நான் விரும்புகிறேன். நீதி வெல்லட்டும்” என்றார்.

நடிகை ரீமா கல்லிங்ல் கூறும்போது, “ ‘அம்மா’வின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதால் அதில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார். ‘அம்மா’வின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி நடிகைகள் பலரும் அதில் இருந்து விலகுவதால் இது கேளரா சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com