உணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்!

உணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்!
உணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்!
Published on

இன்றைய தினம் உங்கள் உணவில் பீட்சா…? பர்க்கர்…? அல்லது வேறு ஏதும் ஃபாஸ்ட் புட் இடம் பெற்றதா…? அப்படியானால் இந்த ஆவணப்படம் உங்களுக்காக உருவாக்கப்பட்டது தான்.

’கார்ப்பரேட் வேளாண்மை’ இந்த சொல் உங்களுக்கு புதிதாக கூட தோன்றலாம். உங்கள் சாப்பாட்டுத் தட்டில் வந்து விழும் உணவுக்கு பின் அதன் உற்பத்தி முறை என்ற ஒன்று உண்டு இல்லையா…? அது என்ன…? உண்மையில் நாம் எதை சாப்பிடுகிறோம் என்று தெரிந்துதான் சாப்பிடுகிறோமா…? நீங்கள் என்ன உணவை சாப்பிட வேண்டும் என தீர்மானிக்கும் கார்ப்பரேட் சக்திகள் எவை…? என ஒரு சர்வதேச உணவு அரசியலை எடுத்து துணிச்சலாக பேசியிருக்கிறது 2008’; வெளியான Food Inc என்ற ஆவணப்படம்.

தங்கள் உணவு முறை கடந்த 10,000 ஆண்டுகளை விடவும் கடைசி ஐம்பது வருடங்களில் பெரிதும் மாறிப் போயிருக்கிறது என்ற கசப்பான அறிவிப்போடு  துவங்குகிறது முதல் காட்சி.

அமெரிக்காவின் பெரும் பகுதி விவசாய நிலங்கள், கோதுமையை பயிரிடுகின்றன. ஒரு சராசரி அமெரிக்கர், வருடத்திற்கு 200 பவுண்ட் கோதுமையை உட்கொள்கிறார் என ஒரு ஆய்வு சொல்கிறது. கோதுமையை நேரடியாக உட்கொள்வது பற்றிய புள்ளிவிவரம் அல்ல இது. தேவைக்கு அதிகமாக விளைவிக்கப்படும் கோதுமையினை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளான பீட்சா, பர்க்கர், கோலா, டொமேடோ சாஸ் என பல வகை பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் வழியாக நம் வாய்க்குள் திணிக்கின்றன. விதையிலிருந்து சூப்பர் மார்க்கெட் வரை சுமார் 1500 மைல்களை கடந்தே இந்த பதப்படுத்தப்பட்ட உணவானது நம் உடலை அடைகிறது. சந்தையில் கிடைக்கும் 47,000 வகையான உணவுப்பொருட்களை அதிகப்பட்சமாக நான்கு ஐந்து பன்னாட்டு நிறுவனங்களே தயாரிக்கின்றன.

அதில் அமெரிக்காவின் மாண்டசா நிறுவனமும் ஒன்று. இப்படத்தில் விவசாயிகள், பொதுநல இயக்கத்தை சார்ந்தவர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள் என பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். தகவல்களை அளித்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் வேளாண்மை என்பது விவசாயிகளை தங்கள் அடிமைகளாக மாற்றுகின்றது. சந்தையில் மக்கள் உடல் நலனுக்கு கேடு தரும் உணவு வகைகளின் தேவைகளை செயற்கையாக உருவாக்கிவிடுகின்றன.

மூன்று மாதங்கள் வளர வேண்டிய கோழி 45 நாட்களின் செயற்கை ஊக்கிகளை கொண்டு வளர்க்கப் படுகிறது. இப்படி கெமிக்கல்களை பயன் படுத்தி வளர்க்கப்படும் கோழியானது தன் சொந்த உடலை தாங்கி நடக்கும் திராணி கூட இல்லாமல் உடைந்து விழுகிறது. இவைகள் மீது சூரிய ஒளி படுவதே இல்லை.

பல விவசாயிகள் தங்கள் பண்ணைகளை படம் பிடிக்க அனுமதிக்கவில்லை என்பதற்கு பின்னால் பன்னாட்டு முதலாளிகளின் பயமுறுத்தல் உள்ளது என்றும் பதிவு செய்கிறார் இப்படத்தின் இயக்குநர் ’ராபர்ட் கென்னர்’

2000-திற்கு பிறகு பிறந்த மூன்று அமெரிக்கர்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்புள்ளது என்ற ஆய்வறிக்கை அச்சமூட்டுகிறது.

“ஏன் நீங்கள் பன்னாட்டு நிறுவனக்களுக்காக விவசாயம் செய்கிறீர்கள்…? உங்களுக்கு தேவையானதை உற்பத்தி செய்யலாமே…?” என்ற இயக்குநரின் கேள்விக்கு பதில் சொல்லும் விவசாயிகள், “நாங்கள் இதைத் தான் விளைவித்து தரவேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறோம், என்றும் இயற்கை விதைகள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனத்தின் கையில் மொத்த அரசுமே சிக்கிக் கொண்டுள்ளது” எனவும் வல்லதிகார விவகாரங்களை பேசுகிறார்கள் அவர்கள். மேலும் விவசாயி ஒருவர் கூறும் போது “ஒரு டஜன் முட்டைகளை 3 டாலர் கொடுத்து வாங்க யோசிக்கும் நகரவாசிகள் 75 டாலர் வரை கொடுத்து சோடாவை குடிக்கிறார்கள்” என வருந்துகிறார்.

மான்சாண்டா நிறுவனம் அமெரிக்காவில் 1996-இல் சோயாபீன்ஸ் உற்பத்தியில் இறங்கும் போது அவர்கள் கட்டுப்பாட்டில் 2% உற்பத்தி மட்டுமே இருந்தது. ஆனால் இன்று 90% வரை உயர்ந்துவிட்டது. எல்லாம் செயற்கையாக மரபணு மாற்றப்பட்ட விதைகளின் வேலை தான்.

இப்படத்தில் மகனை இழந்த ஒரு தாயின் வேதனையும் பதிவாகியிருக்கிறது.

தனது செல்ல மகன் கெவின், மூன்று நாட்கள் தொடர்ந்து பர்க்கர் சாப்பிட்டதால் இறந்து போகிறான். தாய் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்கிறார். அவர் அந்நிறுவனத்திடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் ‘மன்னிப்பு’. ஆனால் எதற்கும் பயப்பட அவசியமில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் இதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ள முன்வரவில்லை. அவர்களுக்கும் அரசுக்குமான ஒப்பந்தம் அத்தனை வலுவுள்ளதாக இருக்கிறது. பிறகு கெவின் சட்டம் என்ற சட்டம் ஒன்று இயற்றப்பட்டதெல்லாம் வேறுகதை.

அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) மீதும் சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார் இயக்குநர். 1972ல் உணவு பாதுகாப்பு தொடர்பாக 50,000 சோதனைகள் வரை நடத்திய FDA சமீபத்தில் 10,000 சோதனைகளை கூட செய்தபாடில்லை. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் முதலாளிகளின் ஒற்றுமையும், அவர்களுக்கு அரசாங்கத்துடன் இருக்கும் நெருக்கமும் காரணம் என்கிறார்.

ஜார்ஜ் புஸ், பில் கிளிண்டன் என எல்லோரையும் விமர்சிக்கிறது இப்படம்.

இந்த ஆவணப்படம் பல சிக்கல்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்டது. சில காட்சிகளை ஹிட்டன் கேமராவால் பதிவு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ‘ராபர்ட் கென்னர்’. ஆனால் இந்த பன்னாட்டு அசுர சக்திகளை சராசரி மனிதன் எப்படி எதிர் கொண்டு வெல்வது…? எனும் நமது கேள்விகளுக்கு படத்தின் முடிவில் சில டிப்ஸ்களை சொல்கிறார் அவர்.

உள்ளூர் பொருட்களை வாங்குங்கள். சீசன் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எல்லா சீசனிலும் மாம்பழம் கிடைக்கிறது என்றால் நீங்கள் விரும்பி உண்பது விஷம். பேக் செய்யப்பட்ட பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் போது அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நன்கு படித்துவிட்டு வாங்குங்கள். என பல விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனால் நாம் ஒரு பொருளின் காலாவதி தேதியை கூட கவனிப்பதில்லை என்பது தான் கசப்பு. மேலதிக தகவல்களை பெற இப்படக்குழு ஒரு இணைய பக்கத்தையும் செயல்படுத்தி வருகிறது : http://www.takepart.com/foodinc

2010ல் சிறந்த ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கருக்கு போட்டியிட்ட இத்திரைப்படம், நியூஸ் அண்டு டாக்குமெண்டரி எம்மி விருது, சவுத் ஈஸ்ட்டன் பிலிம் க்ரிடிக்ஸ் அசோசியேசன் விருது, அமெரிக்காவின் நேஷனல் போர்ட் ஆஃப் ரிவ்யூ விருது, கோதாம் விருது என பல விருதுகளை அள்ளியது.

ஆமாம்…அதெல்லாம் சரி..!!! அமெரிக்காவின் உணவு அரசியல் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதா...? கொஞ்சம் உங்கள் சமையலறை  வரை சென்று செல்ஃபில் எத்தனை பன்னாட்டு பொருட்களை நிரப்பி வைத்திருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

வீடியோ : 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com