அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலனிஸ் என்ற இளைஞர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” படத்தைப் பார்த்துள்ளார். பிரபலமான மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக அவர் 720 மணிநேரம் அல்லது 30 நாட்கள் செலவிட்டுள்ளார்.
இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுகளுக்காக மட்டும் $3,400 (தோராயமாக ₹ 2.59 லட்சம்) செலவிட்டுள்ளார் அந்த இளைஞர். அலனிஸ் இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமை 191 முறை பார்த்து சாதனை படைத்தார். ஆனால் அந்த சாதனையை 2021 இல் ஆர்னாட் க்ளீன் என்ற இளைஞர் “Kaamelott: First Installment” திரைப்படத்தை 204 முறை பார்த்து முறியடித்தார். தற்போது 292 முறை ஸ்பைடர்மேன் படத்தைப் பார்த்ததன் மூலம் அவர் ஏற்கனவே முறியடிக்கப்பட்ட தன் கின்னஸ் உலக சாதனையை மீட்டெடுத்துள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை பதிவை முயற்சிக்கும் நபர் வேறு எந்தச் செயல்பாடும் இல்லாமல் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அதாவது தொலைபேசியைப் பார்க்கவோ, கழிவறையில் இடைவேளை எடுக்கவோ அல்லது தூங்கவோ கூடாது. டைட்டில் கார்டு முதல் எல்லா கிரெடிட்களையும் சேர்த்து, ஒவ்வொரு முறையும் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.