தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வருடந்தோறும் வெளியாகிறது. ஆனால், அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைவது இல்லை. மாஸ் ஹீரோக்களின் படங்களும் சில நேரங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிடுவது உண்டு. அந்தவகையில் இந்தாண்டு வெளியாகி தோல்வியை சந்தித்த மாஸ் ஹீரோக்களின் படங்களின் தொகுப்பை இங்குப் பார்க்கலாம்.
1) கோப்ரா
‘இமைக்கா நொடிகள்’ புகழ் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய தமிழ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
புவன் சீனிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது முந்தைய வெற்றிகளான ‘டிமான்டி காலனி’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ மூலம் நன்கு அறியப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான ‘கோப்ரா’ படம் ரசிகர்களை பெரிதாக கவரமால் படுதோல்வியடைந்தது.
2) பிரின்ஸ்
நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் ‘பிரின்ஸ்’. அனுதீப் கே.வி. இயக்கிய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப் படத்தில் மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கீழ் சுனில் நரங், சுரேஷ் பாபு டி, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய வெற்றிப்படங்களால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக இப்படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
3) ஹே சினாமிகா
‘ஓ காதல் கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’, ‘சீதா ராமம்’ போன்ற பல காதல் வெற்றிப் படங்களுக்காக அறியப்பட்டவர் துல்கர் சல்மான். ஆனால் அவருக்கு ‘ஹே சினாமிகா’ என்ற முழுநீள காதல் கதையான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கைக்கொடுக்கவில்லை. மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் படத்தை, நடன இயக்குநர் பிருந்தா இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிருந்தா. இப்படத்தில் துல்கர் சல்மானுடன், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.
4) கேப்டன்
30 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் ‘கேப்டன்’. இந்த திரைப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்தார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஹாலிவுட் ஆக்ஷன் படமான பிரிடேட்டரின் தழுவலாக இது இருக்கும் என நம்பப்பட்டது. அதற்கேற்றாற்போல் இப்படத்தில் ஆர்யா ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார்.
இவரைத் தவிர, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், மாளவிகா அவினாஷ், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ‘கேப்டன்’ படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைபெற தவறியது.
5) வீரமே வாகை சூடும்
பா. சரவணன் எழுதி, இயக்கிய தமிழ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் மற்றும் டிம்பிள் ஹயாத்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி (VFF) சார்பில் விஷால் தயாரித்திருந்தார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே குருகாஞ்சிராம் மற்றும் என்.பி. ஸ்ரீகாந்த் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனாவுக்குப் பிறகு, பல தடைகளுக்குப் பின்னர் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. எனினும், இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
6) எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த 2013-க்குப் பிறகு அவருக்கு எட்டாவது தொடர்ச்சியான பாக்ஸ் ஆபிஸ் தோல்வி என இந்தப் படத்தை சொல்லலாம். ஆக்ஷன் - திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி, இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார்.
வினய் ராய் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுப்பு பஞ்சு, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே ஆர்.ரத்னவேலு மற்றும் ரூபன் ஆகியோர் கையாண்டிருந்தனர். பெண் கடத்தலுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றுபவராக மாறும் வழக்கறிஞரைச் சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
- அருணா ஆறுச்சாமி