யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாகி ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. காமெடி நடிகராக மட்டுமே இருந்து வந்த யோகிபாபு ‘தர்மபிரபு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக காமெடியிலும் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘மண்டேலா’ படத்தின் டீசர் முழுக்க முழுக்க அரசியல் நையாண்டியோடு சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. டீசரில் நெல்சன் மண்டேலா பெயரோடு வரும் யோகிபாபு. ‘நோட்டாவாவது கோட்டாவாவது காசு கொடுத்தாதான் ஓட்டு’ பேசும் வசனம் தற்கால அரசியல் சூழலையும் மக்கள் மனநிலையையும் பிரதிபலித்தது.
இந்நிலையில், மண்டேலா படத்தில் இருந்து தற்போது ’ஒரு நீதி ஒன்பது சாதி இதுதானே எங்கூரு’ பாடல் வெளியாகி இருக்கிறது. சாதியத்தில் ஊறிப்போன சமூகத்தை அழுத்தமாய் கூர்மையாய் அறைகிறது யுகபாரதியின் வரிகள். கிரிக்கெட் மோகம், சூப்பர் ஸ்டார் மோகம், இலவசங்களுக்காக காத்திருப்பு என ஒரே பாடலில் பல விஷயங்களை அடிக்கியுள்ளார்கள். ’என்னடா ஒரே பாட்டுல இவ்ளோ தத்துவமா?!!! அருமையான பாடல்’என்று பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதேபோல், பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக கிராமத்து பின்னணியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.