2023-ம் ஆண்டு முடிய இன்னும் ஒருசில தினங்களே மீதமிருக்கும் நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள், நிகழ்வுகளையும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக 'REWIND 2023' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை. அந்த வகையில் இந்தாண்டு தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி வெற்றியால் ஷாக் கொடுத்த படங்களை பற்றி பேசும் முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு..
கவின், அபர்ணாதாஸ் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வெளியான டாடா திரைப்படம் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான டாடா படம், குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தது. இருப்பினும் மாணவியாக இருக்கும் நாயகி கருவை கலைக்க வேண்டாம் என்பன போன்றவை கருக்கலைப்பு குறித்த பிற்போக்குத்தனமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், கதையும், அது சொல்லப்பட்ட விதமும் வெகுவாக பாராட்டப்பட்டது.
முன்னதாக ஜனவரியில் வெளியான வாரிசு மற்றும் துணிவு போன்ற படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முழு திருப்தியை கொடுத்த நிலையில், பிப்ரவரியில் வெளியான டாடா, ஷாக் வெற்றி கொடுத்தது. நல்ல விமர்சனங்களால் சுமார் 21 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு ஃபீல் குட் மூவியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குட் நைட் திரைப்படம். குறட்டை பிரச்னையை மையமாக வைத்து மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உறவுகள் குறித்து ஆழமாக பேசியது குட் நைட். மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் என்று படத்தில் நடித்த அனைவருமே தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருந்தனர்.
குறட்டை, காதல், குடும்ப சூழல் என அனைத்தையும் பேசிய படம் பல இடங்களில் கைத்தட்டல்களையும், சில இடங்களில் கண்ணீரையும் வரவழைத்தது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சைலண்டாக வெளியான இத்திரைப்படம் பல இடங்களில் நீண்ட நாட்களுக்கு திரையிடப்பட்டது. நடுத்தர மக்களுக்கு கனெக்ட் செய்துகொள்ளக்கூடிய கதைக்களத்தால் நல்ல வெற்றியையும் பெற்றது குட் நைட்.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்றுள்ளன. ஆனால், வந்ததே தெரியாமல் பார்க்கும் இடமெல்லாம் பேசுபொருளான திரைப்படம் என்றால் அது போர் தொழில் என்றே சொல்லலாம். சரத்குமார் மற்றும் அஷோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படமாக வெளியான போர் தொழில், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரபரப்பான திரைக்கதையை கொண்டுள்ளது.
அனுபவசாலியாக சரத்குமார் பாத்திரம், அறிவாளியாக அஷோக் செல்வன் பாத்திரம் அமைக்கப்பட்டு, அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை தேடி திரியும் கதையாக அமைந்தது போர் தொழில். ராட்சசன், சைக்கோ படங்களுக்குப் பிறகு இறுக்கமான திரைக்கதையுடன் வெளியான போர் தொழில், 50 கோடி வசூலுடன் இந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற டாப் 10 தமிழ் திரைப்படங்களில் 10 இடத்தையும் பிடித்துள்ளது.
ஜோடி ஜோடியாக தியேட்டருக்குள் சென்ற காதல் ஜோடிகளும் சரி, தம்பதிகளும் சரி படத்தைப் பார்த்துவிட்டு தங்களது இரு கைகளை இறுகப்பற்றியபடி வெளிவர வைத்த படம் என்றால் அது ’இறுகப்பற்று’தான். பொருளாதார நிலையில், வெவ்வேறு சூழலில் வாழும் மூன்று தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து திருமண உறவில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கான காரணங்கள், அவற்றை எப்படி கையாளுவது என்பது வரை அனைத்தையும் புட்டுப்புட்டு வைத்து அருமையான ஃபீல் குட் மூவியாக வெளியானது இறுகப்பற்று.
உணர்வுகள், உறவுகள் மற்றும் உளவியல் ஆகியவற்றை கையில் எடுத்து அழகான படைப்பை கொடுத்திருந்தார் இயக்குநர் யுவராஜ் தயாளன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்ட படம் நல்ல பெயரை பெற்றது. உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைத் தேர்வு செய்து, அதை எந்த இடத்திலும் சிதைய விடாமல், கிளைமேக்ஸ் காட்சியில் ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் இருவரும் ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்று ஆடியன்ஸை எதிர்ப்பார்க்க வைத்தவரை வெற்றிக்கனியை பறித்தார் இயக்குநர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஜினர்தண்டா 2 யாருமே எதிர்பாராத வெற்றியை தட்டித்தூக்கியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெரும் வெற்றியை பெற்ற படமாக அமைந்தது. ஜப்பான் என்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியபோது, நேர்மறை விமர்சனங்களால் பார்வையாளர்களை தங்களது பக்கம் திருப்பியது ஜிகர்தண்டா. குறிப்பாக லாரன்ஸின் திரைத்துறையிலேயே அவரது ஆகச்சிறந்த தேர்வாக, நல்ல படமாக அமைந்தது ஜிகர்தண்டா 2. வழக்கமாக பெரிய ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம் சொதப்பலாகவே அமையும்.
அப்படி பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். ஆனால் ஜிகர்தண்டா வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி அதிலும் ஹிட் அடித்த்து படத்தின் 2ம் பாகம். லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா மற்றும் நிமிஷா சஜயன் என்று அனைவருமே அவரவர் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய படத்தை கொண்டாடி தீர்த்தனர் பார்வையாளர்கள்.
ஒரு பார்க்கிங் பிரச்சனையை வைத்து 2 மணி நேரத்திற்கு படமெடுக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தனது திரைக்கதையின் மூலம் அருமையாக பதிலளித்திருந்தார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சிறு சிறு பிரச்சனைகளில்தான் மனிதனின் முழு சிறுமைத்தனமும் வெளிப்படும். அகம்பாகம், கோபம், ஈகோ என்று அனைத்தையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர்.
குறிப்பாக இளம்பரிதியாக நடித்திருந்த எம்.எஸ் பாஸ்கர், இந்த ரோலை என்னைத்தைவிர வேறு யாராலும் நடிக்கவே முடியாது என்பதுபோல, பாத்திரத்திரத்திற்கு அத்தனை அழகாக உயிர் கொடுத்திருந்தார். ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் உருவான இந்தப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் சைலண்டாக வந்து சிக்ஸர் அடித்துச் சென்றது.
படத்தைப் பார்க்கும்போது ராஜா ராணி படத்தை மீண்டும் பார்க்கிறது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் படமாக இருந்தாலும், கல்லூரி நட்பு, காதல், திருமணம் என்று வயதின் அடுத்தடுத்த கட்டங்களில் கச்சிதமாக பொருந்தியிருந்தார் படத்தின் நாயகன் ரியோ ராஜ். படத்திற்கு பெரிய பலம் என்றால் ஒட்டுமொத்த படத்தையும் சொல்லலாம். பெண்களுக்கான கருத்துகள் அனைத்தும் கண்ணியத்துடன் கையாளப்பட்டு, தற்கொலைக்கு எதிரான வசனங்கள் என்று அனைவராலும் ரசிக்கும்படியாக படத்தை எடுத்திருந்தார் ஹரிஹரன் ராம். “என்னது ‘ஜோ’ என்று ஒரு படம் வந்திருக்கிரதா” என்று கேட்கும் வகையில்தான் படத்தின் ரிலீஸ் இருந்தது. ஆனால், வெளியான சில நாட்களில், “அடடே அந்த படத்தை பார்த்தீங்களா” என்ற அளவுக்கு பேசுபொருளாக மாறியது.
காதலி தற்கொலை செய்துகொண்ட பிறகு தானும் தற்கொலைக்கு முயலும் ரியோ ராஜ், அதிலிருந்து மீண்ட பிறகு விருப்பமற்ற திருமண வாழ்வை கையாளுவது என்று அனைத்தும் ரசிக்கும்படி இருந்தாலும், கதை முழுவதும் எந்த வேலைக்கும் செல்லாம நாயகன் குடித்துக்கொண்டே இருப்பது மட்டும் குறையாக அமைந்தது. மற்றபடி, ஆண்டின் கடைசியில் திரை ரசிகர்களுக்கு ஃபீல் குட் மூவியாக வந்து சேர்ந்தது ஜோ. இப்போது நாம் பட்டியலில் பார்த்த பெரும்பலான படங்கள் அறிமுக இயக்குநர்களுடைய கைவண்ணம் என்பது குறிப்பிடித்தக்கது.