திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 25 வயது இளம் பெண் கூறிய புகாரை அடுத்து, பிரபல தயாரிப்பாளர் கரிம் மொரானி ஐதராபாத் போலீசில் சரணடைந்தார்.
ஷாரூக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா.ஒன், ஹேப்பி நியூ இயர், தில்வாலே உள்பட சில இந்திப் படங்களை தயாரித்தவர் கரிம் மொரானி. ஷாரூக் கானின் நண்பர் இவர். மொரானியின் மகளுக்குத் தெரிந்த 25 வயது இளம் பெண் ஒருவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை. இதையடுத்து மொரானியை சந்தித்தார் அந்தப் பெண். நடிக்க வாய்ப்பளிப்பதாகக் கூறிய அவர், சில நாள் பழக்கத்துக்குப் பின் அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தாராம். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்தும் இரண்டு முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் நிர்வாணப் படத்தை செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு வெளியே பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். அந்தப் பெண்ணை அவர் சினிமாவிலும் நடிக்க வைக்கவில்லை. திருமணமும் செய்துகொள்ளவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த அந்தப் பெண், ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து கரிம் மொரானி, முன் ஜாமின் பெற்றார். அவருக்கு எதிராக, ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் கூறியதை அடுத்து, முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, ஐதராபாத், ஹயத்நகர் போலீசில் நேற்று நள்ளிரவில் சரண் அடைந்தார். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.