இந்தி திரைப்படங்கள்தான் இந்திய சினிமாக்கள் என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்தும் பாலிவுட்டில் ரீமேக், டப் செய்யப்பட்டு வெளியாகி பட்டையக்கிளப்பி வருகிறது. அதே வேளையில், இந்தியில் வெளியாகும் படங்கள் எதுவும் அவ்வளவாக சோபிக்காமலே இருக்கின்றன. அதுவும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே தோல்வியை தழுவி வருகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டில் வரலாற்று நிகழ்வுகளை புள்ளியாக வைத்து அக்ஷய் நடிப்பில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ், ராம் சேது ஆகிய இரண்டு படங்களும் பான் இந்தியா முழுவதும் வெளியாகியும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியையே பெற்றிருந்தன. இருப்பினும் அக்ஷய் குமாருக்கு வரலாற்று நிகழ்வுகள் மீதான ஆர்வம் தீரவில்லை என்பது அவரது அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பிலேயே அறிய முடிகிறது.
இந்த முறை அக்ஷய் குமார் கையில் எடுத்திருப்பது இந்தியாவின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக இருந்த மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் வரலாற்றைதான். அதன்படி, ‘வேதாத் மராத்தே வீர் டவுட்லே சாத்’ (Vedat Marathe Veer Daudale Saat) என்ற பெயரில் சத்ரபதி சிவாஜியாக அக்ஷய் நடிக்க இருக்கிறார். இதனை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார்.
அடுத்தாண்டு தீபாவளிக்கு மராத்தி, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும் படத்துக்கான ஷூட்டிங் இன்றுமுதல் தொடங்கியதாகவும் குறிப்பிட்டு படத்தின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். அக்ஷய் குமாரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய் பவானி ஜெய் சிவாஜி எனக் குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
மன்னர் சிவாஜியாக அக்ஷய் குமார் நடிக்கிறார் என்பது ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், வெளியிடப்பட்டு ப்ரோமோவில் இருந்த சில காட்சிகள் நெட்டிசன்களின் கேள்விகளும் கேலிகளுக்கும் ஆளாகாமல் இருக்கவில்லை. ஏனெனில், 16வது நூற்றாண்டில் வாழ்ந்த சிவாஜியின் வாழ்க்கையில் 18வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மின்விளக்குகள் எப்படி வந்திருக்கும் சுட்டிக்கட்டி ட்ரோல் செய்து வருகிறார்கள். இது குறித்த மீம் பதிவுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.