காலம் முழுவதும் கேட்கப்படும் பாடல் எதுவோ அதுவே பாடல் என்ற தகுதி பெறும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய இசை அனுபவங்கள் குறித்தும், இளமைகால அனுபவங்கள் குறித்தும் இசையமைப்பாளர் இளையராஜா மாணவர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். அதன்படி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவர்களுடன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, பாடல்களை பாடியும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் செய்தார். மாணவர்கள் மத்தியில் தனது அனுபவங்களையும், தனது இளவயது நினைவுகளையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ''பறவை பறப்பது போலவும், அருவி கொட்டுவதை போலவும், இசை என்பது இயற்கையோடு இணைந்த ஒன்று. அது இயல்பாகவே நடக்கும் செயல். இசை தானாக வர வேண்டும். அதனை உருவாக்க முடியாது. நல்ல பாடல் என்பது காலம் முழுவதும் ரசித்து கேட்பது போல இருக்க வேண்டும். எப்போது கேட்டாலும் புத்தம் புது பூப்போல இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மேலும் பெரியகுளத்தில் இருந்து வைகை அணைக்கு சென்றதே தனது முதல் பேருந்து அனுபவம் எனக்கூறி மாணவர்களை இளையராஜா நெகிழ வைத்தார்.