கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம்: கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று!

கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம்: கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று!
கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம்: கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று!
Published on

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா,  பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா, நாட்டல தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா உள்ளிட்ட வைரல் பஞ்ச் வசனங்களை பேசி கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று.

தமிழகத்தின் இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான வைரல் பஞ்ச் டயலாக்-களின் நாயகன் கவுண்டமணிதான். தமிழ் மக்கள் இல்லங்களிலுள்ள தொலைக்காட்சி பெட்டிகளில், உள்ளங்களில்  நீக்கமற நிறைந்திருப்பது இவரின் குரல்தான்,  கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளமும் இவருக்கு உண்டு. கவுண்டமணி என்ற பெயருக்கு பொருத்தமானதுபோல , இவரின் அட்டகாசமான counter வசனங்கள் என்றென்றும் நிலைத்திருப்பவை.

உடுமலைப்பேட்டை அருகிலுள்ள வல்லகுண்டாபுரம் கிராமத்தில் 1939 ஆம் ஆண்டு மே25 இல் பிறந்தார். சிறுவயது முதலே நாடகமேடைகளில் தோன்றிய கவுண்டமணியின் இயற்பெயர் சுப்ரமணி. நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட இவர் தனது 15 வது வயதில் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து, பின்னர் பல நாடக கம்பெனிகளிலும் பணியாற்றினார் . தனது 26 வயதில் நாகேஷ் கதாநாயகனாக நடித்த ’சர்வர் சுந்தரம்’ படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் எந்த வசனமும் பேசாமல் கூட்டத்தில் ஒருவராக வந்துபோவார். அதன்பின்னர் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தின் மூலமாக திரையில் தனது முதல் வசனத்தை பேசினார் கவுண்டமணி.

1976 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படத்தில் ‘பத்த வச்சிட்டியே பரட்டை’ எனும் வசனம் மூலமாக பிரபலமானார் கவுண்டமணி. அதன்பின்னர் இவரின் சினிமா பயணம் டாப் கியரில் வேகமெடுத்தது. அதன்பின்னர் சுமார் கால் நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் கலகலப்பூட்டியவர் இவர். அந்த காலகட்டங்களில் கவுண்டமணி நடிக்காத படங்களே இல்லை எனும் அளவுக்கு எல்லா படங்களிலும் நிறைந்திருந்தார் . இவர் இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், இதில் 12 படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

வாழைப்பழ காமெடி மூலமாக பிரபலமான கவுண்டமணி- செந்தில் ஜோடி,  450 படங்களில் இணைந்து நடித்தனர் என்பது உலக சாதனையாக உள்ளது. இவரின் மனைவி பெயர் சாந்தி, இவருக்கு இரு மகள்களும் உள்ளனர். ஆனால் தனது குடும்பத்தை மீடியாவுக்கு காட்டாதவர். அதுபோல மீடியாக்களுக்கு எந்த பேட்டியும் இவர் கொடுத்ததும் இல்லை. நடிகர் என்று யாரேனும் கவுண்டமணியை வியந்து பேசினால் நானும் மனுசந்தான்யா, ஒரு மனுசனுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை மட்டும் கொடுங்க என நக்கலாக பதில்சொல்வார் கவுண்டமணி. தனது திரைப்படங்களில் அரசியல், ஆன்மீகம், சினிமா என அவர் கலாய்க்காத துறைகளே இல்லை. அதுபோல உச்சத்தில் இருந்த நடிகர்களைக்கூட அசால்டாக கலாய்க்கும் துணிச்சலும் கவுண்டமணிக்கு மட்டும்தான் உண்டு. முன்னணி நடிகர்களை விடவும் அதிகம் சம்பளம் வாங்கியவர் இவர், இதனால்தான் கதாநயகர்களுக்கு இணையாக இன்றும் இவரை கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com