கமல் ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவான ‘விக்ரம் ’ திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூல் மற்றும் விமர்சன ரீதியில் விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் லோகேஷுக்கு லெக்சஸ் சொகுசு காரும், ரோலக்ஸாக சில நிமிடங்களே திரையில் வந்தாலும் ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்ற சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சையும் பரிசாக அளித்திருந்தார். இதையெல்லாம் விட உதவி இயக்குநர்களுக்கும் அபாசி பைக் பரிசாக வழங்கி படக்குழுவை நெகிழ வைத்தார் கமல்ஹாசன்.
இப்படி இருக்கையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் #AskDirLokesh என்ற ஹேஷ்டேக் கீழ் விக்ரம் படம் குறித்து கேள்வி எழுப்பலாம் என ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
அதில், கைதி படத்தில் சாகடிக்கப்பட்ட அர்ஜூன் தாஸின் அன்பு கதாப்பாத்திரம் எப்படி விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்தது? இது நம்பவே முடியவைல்லை என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு, “கைதியில் அர்ஜூன் தாஸின் (அன்பு) தாடை மட்டுமே நெப்போலியனால் தாக்கப்பட்டிருக்கும். அதனால்தான் விக்ரமில் அன்புக்கு தையல் போடப்பட்ட அச்சு இருக்கும். இது குறித்து கைதி-2ல் தெரியவரும்” என லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
அந்த குறிப்பிட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, கமல்ஹாசன் பரிசளித்த லெக்சஸ் காரில் எப்போது ரைட் அழைத்து செல்லப்போகிறீர்கள் அர்ஜூன் தாஸ் கேட்க, எப்போ வேண்டுமென்றாலும் போகலாம் என லோகேஷ் பதிலளித்திருந்தார்.
இதுபோக, அனிருத் உடனான கூட்டணி குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு “சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த காம்போ நீடிக்கும்” என்றும், முழுக்க முழுக்க காதல் களம் கொண்ட படம் எடுப்பீங்களா என ரசிகர் கேட்க கஷ்டம் ப்ரோ என லோகேஷ் ட்வீட்டியிருந்தார்.
மேலும், விக்ரம் பட இண்டெர்வல் சீனில் கமல்ஹாசனை ரிவீல் செய்யும் காட்சி குறித்த கேள்விக்கு, நேரில் பார்க்கும்போதே புல்லரிக்கச் செய்த காட்சி அது என்றும், விக்ரம் படத்திற்கு திரைக்கு பின்னால் இருந்த உழைத்த லைட் மேன்களின் பங்கிற்கு மிகப்பெரிய நன்றிகள் என்றும் லோகேஷ் பதிலளித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க கலையரசன், சாந்தனு உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் தங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் முன் வைத்து வருகிறார்கள். இதில் சாந்தனு எழுப்பிய கேள்வி ட்ரோல் ஆகி வருகிறது. அதாவது, மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்த பார்கவ் கதாபாத்திரம் பவானி ஆட்களால் லாரி ஏற்றி கொல்லப்பட்டிருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கைதியில் கொல்லப்பட்டிருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்ட அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் விக்ரமில் உயிர் பெற்றது போல், பார்கவ் கதாபாத்திரமும் லோகிஷின் யுனிவர்சில் திரும்ப வருமா என்பது போல் சாந்தனு குறிப்பிட்டிருந்தார். இதனை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஆனால், இந்த கேள்விக்கு, சாரி மச்சி பார்கவ் செத்துட்டான் என லோகேஷ் பதிலளித்தது படு வைரலாகி வருகிறது.
இன்னும் ஒரு ரசிகர், உங்கள் படங்களில் தான் இரவு நேர காட்சிகள் அதிகம் இருக்கிறது என்றால் நீங்கள் ரசிகர்களுடன் பேசுவது இரவு நேரத்தில் அமைத்திருக்கிறீர்களே.. இதற்கு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேலை பளு தான் காரணம் என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்து இருந்தார்.