புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா உருவாக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கோவை நீதிமன்றம் அருகிலுள்ள திரையரங்கில் பார்க்கிங் பட விளம்பர நிகழ்ச்சிக்காக படத்தின் இயக்குனர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் திரையரங்கிற்கு வருகை தந்தனர். பார்க்கிங் படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடையே கலந்துரையாடினர்.
தொடர்ந்து, ரசிகர்களுடன் ஹரிஷ் கல்யாண் செல்பி எடுத்துக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பை விட நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தாலும் கூட, புது இயக்குனர், புதுமுக நடிகர்களாக குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் கூட, நல்ல கதை உள்ள படங்களை மக்கள் வரவேற்கிறார்கள்.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் பார்க்கிங் படம் மிகச் சிறந்த படத்தின் பட்டியலில் இடம்பெறும் என விமர்சனங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதியில் வழங்கியிருப்பதாகவும் இதே போல் பலரும் முன் வந்து உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.