‘கேஜிஎஃப்’ படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதியப் படத்தில், கன்னட திரையுலகின் 3-ம் தலைமுறை கலை வாரிசு யுவராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘கே.ஜி.எஃப் 2'. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்ப்புகளையும் மீறி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை செய்து வருகிறது. சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.
இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ‘சலார்’ படத்தையும் இந்த நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும்நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவுடன் இந்தப் பட நிறுவனம் தயாரிக்கும் புதியப் படத்தின் அறிவிப்பு கடந்த 21-ம் தேதி வெளியானது.
இதற்கிடையில் நேற்று இந்தப் பட நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளித்திரையில் புதிய சகாப்தம் என்று தெரிவித்து இன்று காலை அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஹோம்பாலே பிலிம்ஸ் மேலும் ஒரு புதியப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார் அறிமுகமாகும் புதியப் படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. யுவராஜ்குமார், ராஜ்குமாரின் இரண்டாவது மகனும், நடிகருமான ராகவேந்திர ராஜ்குமாரின் மகன் ஆவார். இந்தப் புதியப் படத்தை, கன்னட உலகில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ராஜகுமாரா’, ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமச்சாரி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் அனந்த் ராம் இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார், யுவராஜ்குமாரின் சித்தப்பா ஆவார்.