தொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் ?

தொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் ?
தொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் ?
Published on

‘பிகில்’ திரைப்படம் வெளியாகும் தேதி நெருங்கி வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரம், பட வெளியீட்டில் இருக்கும் சில சிக்கல்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது

விஜய்யின் முந்தைய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததால், அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. அந்தவகையில், அவர் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வரும் 'பிகில்' திரைப்படம் விஜய்யின் சம்பளத்தோடு சேர்த்து சுமார் 130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதனை ஈடுசெய்ய வேண்டிய வியாபாரமும் அவசியமாகி உள்ளது. அதே நேரம், ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, அரசியல் ரீதியாக படத்திற்கு சிக்கலை ஏற்படுத்துமோ? என்கிற குழப்பத்தையும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

‘பிகில்’ திரைப்படத்தை தயாரித்த நிறுவனம், படம் தீபாவளியன்று, அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை திரைக்கு வரும் என அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்து வரும் வேலை நாட்களில் படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா? என்கிற சந்தேகம் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆகவே படத்தை வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வெளியிட்டால்தான் வசூல் பார்க்க முடியும் எனவும் அவர்கள் கூறிவந்தனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், விஜய்யின் முந்தைய படங்களின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்க, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டால் மட்டுமே சாத்தியம் என தெரிவித்ததாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அத்துடன், ‘பிகில்’ படம் தணிக்கை ஆகாமல் இருந்ததும் அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாகுமா? என்கிற குழப்பத்தை திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இதுபோன்ற காரணங்களால், கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்தின் பக்கம் திரையரங்க உரிமையாளர்களின் கவனம் திரும்பியது. அந்தப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக லாபகரமான படங்களைக் கொடுத்து வருவதும் அதற்கு காரணம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 25-ம் தேதி ‘பிகில்’ வெளியாகும் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையும் தொடங்கியது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் விஜய்யின் மார்கெட் விலையை விட பலமடங்கு அதிகமாக சுமார் 200 கோடி அளவிற்கு விலையை நிர்ணயித்திருப்பதாகத் தெரிகின்றது. விஜய்யின் முந்தைய படங்கள் நூறிலிருந்து 150 கோடி வரை வசூலித்திருப்பதால் பிகில் அந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது. ஆனால், அதனை ஏற்க திரையரங்கு உரிமையாளர்கள் பலர் தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, விஜய் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த முன்னணி திரையரங்குகளே பிகிலை ரிலீஸ் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்தபோது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினர். ஆகவே, பிரச்னைகள் சுமூகமாக முடிந்து, பிகில் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்து, சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com