விஸ்வாசம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் - விநியோகஸ்தர் ராஜேஷ்

விஸ்வாசம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் - விநியோகஸ்தர் ராஜேஷ்
விஸ்வாசம் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் - விநியோகஸ்தர் ராஜேஷ்
Published on

குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வருவதே விஸ்வாசம் திரைப்படத்தின் வசூலுக்கு காரணம் என அப்படத்தின் விநியோகஸ்தர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடித்த ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ஒன்றாக வெளியானது. தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ‘பேட்ட’ அதிக திரைகளில் வெளியானது. அதேசமயம் இந்திய அளவில் அதிக திரைகளில் வெளியாகவிட்டாலும், தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ தனக்கென ஒரு இடத்தை பிடித்தது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டக்குரிய விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் பேட்ட திரைப்படம் 11 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விஸ்வாசம் திரைப்படம் 125 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் விநியோகஸ்தரான கேஜேஆர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்த அறிவிப்புகள் வெளியான நொடியில் இருந்தே சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். விஸ்வாசம் திரைப்படம் வெளியான ஒரு வாரத்துக்குள் 125 கோடி வசூல் செய்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து பேசியுள்ள அப்படத்தில் விநியோகஸ்தரான ராஜேஷ், படத்தை வெளியிட்டவன் நான். நான் தானே வசூல் நிலவரம் குறித்து பேச வேண்டும் என்று பதிலளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜேஷ், விஸ்வாசம் வசூல் குறித்து பேசியுள்ளார்.

அதில் ''விஸ்வாசம் வசூல் குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். யாரென்றே தெரியாத ஒருவர் வசூலைப்பற்றி சொல்வதற்கும், படத்தை வாங்கி வெளியிடும் நான் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டும். என் அலுவலகத்துக்கு வந்தால் வசூல் குறித்து முழு விளக்கம் தருகிறேன். இரண்டு படங்களுமே நல்ல வசூலை ஈட்டுகின்றன. குறிப்பாக விஸ்வாசம் திரைப்படத்துக்கு ரசிகர்கள் திரும்ப திரும்ப படம் பார்க்க வருகிறார்கள். தனியாகவும், நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கூட்டம் கூட்டமாக படம் பார்க்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணமெல்லாம் தான் வசூல்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ''நூறு சதவீதம் விஸ்வாசம் திரைப்படம் நடிகர் அஜித்தின் திரைப்பட வாழ்வில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. விஸ்வாசம் வெற்றிக்கு அஜித் ரசிகர்களே காரணம். அவர்களின் கோரிக்கையை ஏற்றே படத்துக்கான திரையரங்குகள் அதிகரிப்பட்டன. தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கு இந்த இரு படங்களின் ரிலீசும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. பண்டிகை காலங்களில் இரண்டு பெரிய படங்கள் வெளியானாலும் வசூலில் பாதிப்பிருக்காது என்பதற்கு இந்த பொங்கலே எடுத்துக்காட்டு. சமூக வலைதள கருத்துகளை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொள்கிறேன். இங்கு யாரும் யாருக்கும் எதிரி இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com