சென்சார் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு திரைத்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதியா? ஒர் அலசல்

சென்சார் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு திரைத்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதியா? ஒர் அலசல்
சென்சார் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு திரைத்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதியா? ஒர் அலசல்
Published on

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியத்தின் முடிவில் படத் தயாரிப்பாளர்கள் முரண்படும் பட்சத்தில் அவர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுவது வழக்கம். 1983-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்தின் முடிவுடன் முரண்பட்டால் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பாலிவுட் திரைப்படத்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதுடன் துணிச்சலான கருத்துகளை சொல்வதற்கும் தயக்கம் ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்த ’நியூஸ் 360’ விவாதத்தில் திரைப்பட தயாரிப்பாளர் முக்தா சுந்தர் பேசும்போது, 

“பல நேரங்களில் திரைப்பட தணிக்கைக் குழுவினரால் தடை செய்த படங்கள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு சென்றாலும் சாதகமான தீர்ப்புகள் வருவதில்லை. கடைசியில், நீதிமன்றத்தைத்தான் நாடுகின்றனர். இதனால், என்னுடையக் கருத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தேவையில்லை என்பதுதான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சுதந்திரமாக படம் எடுக்கலாம். ஆனால், சட்டத்தில் எவையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டுத்தான் படம் எடுக்கவேண்டும். இதில், தணிக்கைக் குழுவும் சட்டத்திற்குட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றுகிறது.

அதேபோல, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இல்லாமல் நீதிமன்றத்திற்குப் படங்கள் சென்றால் வழக்கு முடிய பல ஆண்டுகாலம் ஆகும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பலத் திரைப்படங்கள் சூழலைப் பொறுத்து நள்ளிரவில் கூட விசாரிக்கப்பட்டுள்ளன. உடனுக்குடன் தீர்ப்புகள் வந்துள்ளன. நீதிமன்றம் சென்றால் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தைவிட நல்ல தீர்ப்பே கிடைக்கும். தயாரிப்பாளருக்கு செலவு கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான். ஆனால், நியாயம் கிடைக்கும். தணிக்கைக் குழு, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில்கூட ஒருதலைபட்சத்தில் கட்சி சார்பில் முடிவு எடுக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் அப்படி எடுக்கமாட்டார்கள்” என்று மத்திய அரசு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்ததற்கு ஆதரவாகப் பேசுகிறார் முக்தா சுந்தர்.

அவரைத்தொடர்ந்து பேசிய  திரைப்பட விமர்சகர் பிஸ்மி, 

“எளிதாக பலப் படங்களுக்கு அனுமதி கொடுப்பதால்தான் பாஜக அரசு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது. சென்சார் போர்டில் 6 பேர் வரைதான் பார்ப்பார்கள். ஆனால், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் 10 பேர் வரை பார்ப்பார்கள். அப்போது, கருத்துகள் மாறுபடும். ’உத்தா பஞ்சாப்’, ’ஜோதா அக்பர்’ உள்ளிட்ட நிறைய படங்கள் அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட படம் என்று அனுமதி மறுத்தார்கள். ஆனால், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் செல்லும்போது எளிதாக கிடைத்திருக்கிறது. திரைக்கலைஞர்களுக்கு பெரும்பாலும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நியாயம் கிடைத்துவிடும்.

ஆனால், நீதிமன்றம் சென்றால் அவ்வளவு எளிதாக தீர்ப்பு வழங்கி நியாயம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆர்.கே செல்வமணியின் ’குற்றப்பத்திரிகை’ படம் நீதிமன்றம் சென்றபோது 13 வருடம் கழித்துதான் தீர்ப்பே வந்தது. ஒரு படத்தின் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு 10 வருடம் வழக்கு நடந்தால் என்ன நிலைமைக்கு ஆளாவர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தைக் மத்திய பாஜக அரசு கலைத்ததே திரைக்கலைஞர்களுக்கு மிகப்பெரிய அநீதி. இதற்கு. எதிராக பாலிவுட் கலைஞர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. தங்கள் கடமையைச் செய்யக்கூட அச்சம் கொள்கிறார்கள். பாஜக தங்களுக்கு எதிராக, தங்கள் கொள்கைகளுக்கு எதிராக படம் எடுப்பவர்களை ஒடுக்க நினைக்கிறது. ஏற்கனவே, கருத்துரிமைக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளில் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்ததும் ஒன்று” என்று கருத்துரிமைக்கு ஆதரவாக பேசுகிறார், பிஸ்மி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com