விமர்சனங்களை ஏற்க மறுக்கிறாரா பா.ரஞ்சித்? - பரியேறும் பெருமாளை மக்கள் ஏன் கொண்டாடினார்கள்?

கர்ணன், மாமன்னனை விட பரியேறும் பெருமாளை ஏன் கொண்டாடினார்கள்? - விமர்சனங்களை ஏற்க மறுக்கிறாரா பா.ரஞ்சித்!
இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்pt web
Published on

விவாதத்தை ஏற்படுத்திய பா.ரஞ்சித்தின் சமீபத்திய பேச்சு

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கலான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

“படைப்பாக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் புதிய முயற்சிகளை பிரமிக்கும் வகையில் கையாண்டிருக்கிறார், விக்ரம் அசாத்தியமான நடிப்பை கொடுத்துள்ளார், ஜிவி பிரகாஷ் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான இசையை கொடுத்துள்ளார்” என பலரும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இருப்பினும், படம் புரியவில்லை எனவும், படத்தில் பேசப்படும் பல வசனங்கள் சரியாக கேட்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு ஒலி சேர்ப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை பட முன் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய விஷயம் பேசு பொருளாகியுள்ளது.

சிலர் சொல்கிறார்கள்.. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் பிடிக்கிறது.. ஆனால், கர்ணன், மாமன்னன் பிடிக்கவில்லை என்று.. அப்படியென்றால் நாங்கள் கெஞ்சும் தொனியில் படம் எடுத்தால் பிடிக்கும், எதிர்த்து சண்டையிடும் தொனியில் படம் எடுத்தால் ஏற்க முடியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். பா.ரஞ்சித் பேசிய இந்த கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
HBD Raadhika Sarathkumar | வெகுளித்தனமும் கம்பீரமும் கலந்த கலவை... ராதிகா என்னும் நடிப்பு ராட்சசி!

கருத்து எப்படியோ அழகியலும் முக்கியமானதே!

எந்தவொரு திரைப்படமும் அதன் திரைமொழி நன்றாக இருந்தால் நிச்சயம் மக்களிடம் சென்று சேரும்... கொண்டாடப்படும். ஆனால், திரைமொழி சரியில்லையென்றால் எவ்வளவு பெரிய இயக்குநர்களாக இருந்தாலும் நிச்சயம் அந்தப் படைப்பு நிராகரிக்கப்படும். அதற்கு சமீபத்திய உதாரணம் இந்தியன் 2. மணி ரத்னம் போன்றவர்களின் படைப்புகளே முற்றிலும் நிராகரிகப்பட்ட நிகழ்வுகளும் இங்கே உண்டு. அதனால், யார் இயக்குகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஒரு படைப்பு எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

பரியேறும் பெருமாள் எல்லோரையும் கவர்ந்தது எப்படி?

பரியேறும் பெருமாளின் திரைமொழி வித்தியாசமானது. ஒரு கலைப்படைப்பாக அதற்கே உரித்தான அழகியல் தன்மையோடு இருந்தது. எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும் சொல்லும் பாணி என்பதுதான் முக்கியமானது. அதனை கூடுமான அளவிற்கு நிறைவேற்றி இருந்தது பரியேறும் பரிமாள். கதிர், ஆனந்தி, பூ ராம் உள்ளிட்ட எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக பொருந்தி இருந்தார்கள். இசை புதிய வடிவத்தில் கொடுக்கப்பட்டிருந்து கவனம் ஈர்த்தது. படம் முடிக்கப்பட்ட விதமும் பலரது மனங்களையும் உலுக்கியது.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
“அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை” - கொட்டுக்காளி படக்குழுவிற்கு கமல்ஹாசன் பாராட்டு

கர்ணனின் நாயக வழிபாடு ஒரு சிக்கல்தானே!

கர்ணன் படமும் நிச்சயம் வெற்றிப் படம்தான். சில விமர்சனங்கள் இருந்திருக்கலாம். ஆனால், கர்ணன் நிச்சயம் வெற்றிப் படம்தான். நாட்டர் தெய்வ மரபை கையாண்டதில் புதிய திரைமொழியாகவும் இருந்தது. ஆனால், கதையோடு ஒன்றாத சில காதல் காட்சிகள், அதீத நாயக வழிபாடு என குறைகளும் தென்பட்டன. அதனால் பரியேறும் பெருமாளை விட கர்ணன் சிறந்த படமாக தெரியாமல் போயிருக்கலாம். அதோடு, அசுரன் வெளியாகிவிட்ட நிலையில் அதே பாணியில்தான் கர்ணனும் இருந்ததால் புதிய அனுபவமாக தனுஷ் பேசும் வசனங்களை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அசுரன், கர்ணன் வரிசையில் கேப்டன் மில்லர் படத்திலும் அதேபோன்ற வசனங்கள் இடம்பெற்றது தாக்கத்தை குறைவாகவே கொடுத்தது.

மாமன்னன் - இரண்டாம்பாதி மிகப்பெரிய பலவீனம்!

மாமன்னன் படத்தை பொறுத்தவரை அதுவும் வெற்றிப்படம்தான். ஆனால், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை காட்டிலும் அதிக குறைகள் தென்பட்ட படம். குறிப்பாக முதல் பாதியில் அழகியலாக காட்சிகள் நகர இரண்டாம் பாதியில் வரும் தேர்தல் காட்சிகள் உட்பட பலரும் சாதாரண கமர்ஷியல் படங்களை போன்றே இருந்தது. படமாக்கப்பட்ட விதம் முதல் பாதியை விட இரண்டாம் பாதி முற்றிலும் வேறாக இருந்தது. உதயநிதி நன்றாக நடித்து இருந்தாலும் பகத் ஃபாசில், வடிவேலுக்கு ஈடுகொடுக்கவில்லை. வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். எப்படி இருந்தாலும் மாமன்னனும் வெற்றிப் படமே.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
“காய் செம இல்லாத ஊர பாத்து ஓடிப்போயிரலாம்ல” - அம்பேத்கர், மார்க்ஸ்.. கவனம் ஈர்க்கும் வாழை ட்ரெய்லர்!

நோக்கத்தை நிறைவேற்றியது பரியேறும் பெருமாள்தானே!

இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்PT Desk

இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இருவரும் தாங்கள் சார்ந்த சமூகம் பட்ட இன்னல்கள் குறித்து எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், சாதி எவ்வளவு மோசமானது என்பதை புரிந்து கொள்வதற்கான உரையாடல்கள் நடைபெற வேண்டும் என்றே சொல்லி வந்தார்கள். கூட்டி கழித்து பார்த்தால் இருவர் இயக்கிய மொத்த படங்களிலுமே பரியேறும் பெருமாள்தான் அந்த உரையாடலை சரியாக முன்னெடுத்தது. மனங்களை மடைமாற்றம் செய்ய வேண்டும் என்ற அவர்களது எண்ணங்களை ஓரளவு கொண்டு சேர்ந்தது. சாதி ஒழிப்பு என்பது மிக நீண்ட பயணம். அதில், ஆக்ரோஷமும் அதே நேரத்தில் நிதானமும் தேவை. பரியனிடம் இருந்த நிதானம் பலரையும் கவர்ந்தது. மாற்றதை காட்டாமலே மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது பரியன் - ஜோவின் முடிவு.. காட்சி அமைப்பாக படம் முடிக்கப்பட்ட விதமும் கவிதையாக இருந்ததாக பலரும் சிலாகித்தார்கள்.

திருப்பி அடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்களா?

அசுரன் படம் வந்த பிறகு ஒரு வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டது. பிளாஷ் பேக்கில் சிவசாமி கதாபாத்திரம் எல்லோரும் வெட்டுவது போல் ஒரு காட்சி வரும். அப்பொழுது டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி ‘அவன வெட்டுடா..’ என உணர்வுபூர்வமாக கத்துவார். இது எப்படி நிகழ்ந்தது? பாதிக்கப்பட்டவர்களின் நியாயங்களை சரியாக காட்சிப்படுத்தினால் நிச்சயம் மக்கள் திருப்பி அடிப்பதை ஏற்பார்கள். இதற்கு தமிழ் சினிமாவில் ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. அதில் அசுரன் சமீபத்தில் வந்ததே.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டே ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமாக ஹீரோக்கள் திருப்பி அடித்துக் கொண்டு வசனங்களை ஓங்கி ஒலித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள். ஒரே ஒரு நிபந்தனை மட்டும்தான்... ஒருவன் திருப்பி அடிப்பதற்கான சூழலை மிக அழுத்தமாக கதைக்குள் கட்டமைக்க வேண்டும். கருத்து ரீதியாக விசாரணைகளை நடத்தி சொல்ல வந்த விஷயத்தை எல்லோரும் ஏற்கும் படியான சூழலில் திருப்பி அடிக்க வேண்டும்.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
“முடிய எடுக்க சொன்னார்.. கோமணம் கட்ட சொன்னார்.. பயங்கரமான பயம் இருந்தது” - விக்ரம் நெகிழ்ச்சி!

அத்தோடு, பரியன் திருப்பி அடிக்கவில்லை என்று யார் சொன்னது? பரியேறும் பெருமாள் படத்தில் எந்த இடத்திலும் பரியன் சமாதானம் ஆகவே இல்லை.. தனக்கு இன்னல்கள் வரவர கொந்தளித்துக் கொண்டேதான் இருந்தான். தன்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டேதான், சண்டையிட்டு கொண்டேதான் இருந்தான். சில நேரங்களை மரணத்தில் இருந்து தப்பித்து ஓடினான். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பரியன் வெடித்துக் கொண்டே இருந்ததை படம் முழுவதும் காணலாம். ஒன்றே ஒன்றுதான்... அவன் நினைவில் இருந்தது படிக்க வேண்டும். அதுதான் திருப்பி அடிப்பதற்கான பெரிய விஷயம் என்று அவன் மனதில் பதிந்து இருந்தது.

விமர்சனங்களை ஏற்க மறுக்கிறாரா பா.ரஞ்சித்?

பா.ரஞ்சித் முன் வைத்த கருத்தில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், அவையெல்லாம் புறம் தள்ள வேண்டிய சொற்பமான விஷயம் ஆகும். இங்கு சிக்கல் என்னவென்றால் மேற்கூரிய விமர்சனங்களை இருவருமே சீர் தூக்கி பார்க்காவிட்டால் மீண்டும் அந்த திரைமொழி கைக்கூடுவது சிரமமாக ஆகிவிடும். தங்கலான் படம் குறித்து முக்கியமாக சில விமர்சனங்கள் எழவே செய்தன. அதையெல்லாம் முகம் கொடுத்து ஏற்கத்தான் வேண்டும். திட்டமிட்டு வன்மத்தோடு சிலர் விமர்சிக்கலாம், அது அரசியல் களத்தில் நடந்த சிலவற்றின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால், ஜென்ரல் ஆடியன்ஸ் என்று பெருங்கூட்டம் இருக்கிறது. படம் திரைமொழியாக நன்றாக இருந்துவிட்டால் நிச்சயம் அவர்கள் அதனை தங்கள் தோளில் சுமக்க தொடங்கவிடுவார்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
’மருதமலை மாமணியே முருகையா..’! ஆக்சன், காமெடி, எமோசன் என ஃபுல்-பேக்கேஜாக கலக்கும் GOAT ட்ரெய்லர்!

தங்கலானை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், கொஞ்சம் புரியவில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நடந்த அனுபவங்களை படக்குழு கணக்கில் எடுத்து முன் எச்சரிக்கை உணர்வுடன் சில விஷயங்களை சரி செய்து இருக்கலாம். விமர்சனங்களை ஏற்பதாக மனம் திறந்து சொல்ல வேண்டும். தான் உருவாக்கிய படைப்பு சரியாக சென்று சேரவில்லையே என பதைபதைப்பு வெளிப்பட வேண்டும்.

ஏனெனில் தங்கலான் புதிய முயற்சி. தமிழ் சினிமா வரலாற்றில் ஏற்கனவே பேசப்பட்ட கருத்தியலாக இருந்தாலும், இது புதிய முயற்சிதான். அதனால், அதற்கே உரித்தான சிக்கல்கள் இருக்கவே செய்யும். திரைமொழியாக சார்பட்டா பரம்பரை போல் இல்லை என்பதை பா.ரஞ்சித் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். திரைப்படம் என்பது அறிவாளிகளுக்கு மட்டுமல்ல, அது வெகுஜன ஊடகம்.

கருத்துள்ள படங்களை எடுப்பவர்கள் கூடுதலான பொறுப்புணர்வு இருக்கவே செய்கின்றன. அது இன்னும் பலரையும் அதுபோன்ற திசையில் பலரையும் உருவாக்கும்.

இயக்குநர் பா. ரஞ்சித், தங்கலான், பரியேறும் பெருமாள்
PT Exclusive | தவெக: ஒத்திகை பார்க்கப்பட்டது கட்சியின் கொடி இல்லையா? எப்படி இருக்கும் புதிய கொடி..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com