directors and their sons
directors and their sonspt

மகன்களை ஹீரோவாக களமிறக்கும் தங்கர் பச்சான், முத்தையா! எஸ்ஏசி பாணியில் படையெடுத்த இயக்குநர்கள் லிஸ்ட்

கிராமத்து அழகியலை படம்பிடித்து காட்டி வந்த இரண்டு முக்கிய இயக்குநர்களான தங்கர் பச்சானும், முத்தையாவும் தங்களது மகன்களை ஒரே நேரத்தில் நடிகர்களாக களமிறக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் தங்களது மகன்களை நாயகர்களாக களமிறக்கிய இயக்குநர்களின் பட்டியல் இதோ!
Published on

எஸ்.ஏ சந்திரசேகர் - நடிகர் விஜய்..

தமிழ் சினிமாவில் தற்போது உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யை, 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார் அந்த நேரத்தில் கொடிகட்டிப்பறந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கி, செந்தூரப்பாண்டி, தேவா, விஷ்ணு என்று தொடர்ந்து மகனை வைத்து படங்களை கொடுத்தார் சந்திரசேகர். அந்த காலகட்டத்தில் படுபிசியாக இருந்த முக்கிய இயக்குநர்களின் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி ராஜா - தனுஷ்

என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா, வீர தாலாட்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரி ராஜா, துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தனது மகன் தனுஷை நாயகனாக அறிமுகம் செய்தார். 2002ம் ஆண்டு தனது தந்தையால் அறிமுகம் செய்யப்பட்ட தனுஷ், தற்போது 50வது படத்தை அவரே எழுதி இயக்குகிறார்.

directors and their sons
"உங்களை வைத்து இயக்கும் நாள் வரும் என நினைக்கவில்லை" - தன்னை செதுக்கிய குருவுக்கே டீச்சர் ஆன தனுஷ்!

டி. ராஜேந்தர் - சிலம்பரசன்

ஒரு தலை ராகம் படத்தில் தொடங்கி, தனக்கே உரித்தான தனி பாணியில் படங்களை இயக்கிய டி. ராஜேந்தர், தனது 10க்கும் மேற்பட்ட படங்களில் மகன் சிலம்பரசனை குழந்தை பாத்திரமாக நடிக்க வைத்து, பின்பு 2002ம் ஆண்டு அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்து இசையும் அமைத்திருந்தார் டி. ராஜேந்தர்

பாக்கியராஜ் - ஷாந்தனு

தமிழ் சினிமாவில் தேர்ந்த இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படும் பாக்கியராஜ், அவரது மகன் சாந்தனுவை பல படங்களில் நடிக்க வைத்துள்ளார். பல படங்களில் கேமியோ ரோல்களை ஏற்று நடித்தவர் சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயக அவதாரம் எடுத்தார். நன்றாக நடிக்கத்தெரிந்தும், நடனமாடத்தெரிந்தும் இன்னமும் குறிப்பிட்ட வெற்றியை எட்டிப்பிடிக்காமலேயே இருக்கிறார் சாந்தனு. சமீபமாக இவர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

directors and their sons
கில்லி முதல் பில்லா வரை.. மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஹிட் படங்கள்.. எப்போது தெரியுமா? லிஸ்ட் இதோ!!

பாரதிராஜா - மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ட்ரேட் மார்க் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் மண்வாசனை மன்னன் பாரதிராஜாவின் மகன் மனோஜ், பல படங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான தாஜ் மஹால் படத்தின் மூலம் நாயக அவதாரம் எடுத்த இவர், தற்போது பல படங்களில் துணைப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

சரி, தங்களது மகன்களை புது நாயகர்களாக அறிமுகப்படுத்தும் இயக்குநர்களின் படங்களுக்கு வருவோம். கிராமத்து கதைகளை, அதன் அழகியலை புள்ளி மாறாமல் காட்சிப்படுத்தியவர்கள் வரிசையில் தங்கர் பச்சானும், முத்தையாவும் எப்போதும் முதல் வரிசையிலேயே இருக்கின்றனர்.

தங்கர் பச்சானும்.. சினிமாவும்

பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தங்கர் பச்சான், அழகி படத்தின் மூலம் இயக்குநராகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை என்று குறிப்பிடத்தக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிப்பிலும் தனி கவனம் ஈர்த்துள்ள இவர், கடைசியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கி இருந்தார். முன்னதாக தனது இயக்கத்திலேயே மகன் விஜித் பச்சானை வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் படத்தை எடுத்த நிலையில், ஏனோ அது வெளியாகவில்லை. இந்நிலையில்தான், அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பேரன்பும் பெருங்கோபமும் படத்தின்மூலம் தனது மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாவதாக அவரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

directors and their sons
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

இளையராஜா இசையில் புதிய படம்!

எக்ஸ் தளத்தில் படத்தின் போஸ்டருடன் பதிவிட்ட அவர், “அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் எனது மூத்த மகன் விஜித் பச்சான் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். எனது மகன் கமிட்டான கதையை நான் கேட்கவில்லை. ஆனால், உருவாகியுள்ள படத்தை ஒருமுறை பார்த்தேன். சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த நேர்மறையான தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படம் நல்ல வெற்றியை பெறுவதற்கு படக்குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில், விஜித் பச்சான் அறிமுகமாகும் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானதாக தெரிகிறது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் நடந்துவருவதாகவும், படம் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக நடிக்கும் இதில், அருள்தாஸ், மைம் கோபி உட்பட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஏ சந்திரசேகர், டி.ஆர் வரிசையில் சினிமாவில் தனது மகனை நாயகனாக உருவாக்கும் அடுத்த இயக்குநராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார் தங்கர் பச்சான்.

குட்டி புலி முதல் விருமன் வரை.. முத்தையா!

ஒரு பக்கம் தங்கர் பச்சான் எப்படி கிராமத்து பின்புலம் கொண்ட கதைகளை தந்தாரோ, அப்படித்தான் கிராமத்து பின்புலம் கொண்ட கதைகளை கமர்ஷியல் மசாலாவோடு கலந்து கொடுத்து வருகிறார் முத்தையா. சசிகுமாரின் குட்டி புலி படத்தில் தொடங்கி, விஷாலுக்கு மருது, கார்த்திக்கு கொம்பன் மற்றும் விருமன், ஆர்யாவுக்கு காதர் பாட்சா எனும் முத்துராமலிங்கம் போன்ற படங்களை இயக்கி தனிகவனம் பெற்று வந்துள்ளார்.

முத்தையாவும்.. விஜய் முத்தையாவும்!

இதற்கிடையே, தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து புது படம் ஒன்றை எடுக்கத் தொடங்கியுள்ளார் முத்தையா. இதற்கான பூஜை மதுரையில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. மதுரையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுவதாக தெரிகிறது. படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்துக்கொள்கிறார். முத்தையா பாணியில் வழக்கமான கிராமத்து கதைதான் என்றாலும், படத்தில், காதல் மற்றும் ஆக்‌ஷன் மசாலாக்கள் தூக்கலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற இயக்குநர்களைப் போன்று அல்லாமல், தான் உச்சத்தில் இருக்கும் காலத்திலேயே மகனை நாயகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முத்தையா. ஒருகாலத்தில் எப்படி, எஸ். ஏ சந்திரசேகர் மற்றும் கஸ்தூரி ராஜா போன்றவர்கள் சொந்த முயற்சியில் பல படங்களை எடுத்து மகனை நாயகனாக்கினார்களோ, அதே பாணியை சற்று முன்னரே கையில் எடுத்திருக்கிறார்கள் முத்தையாவும், தங்கர் பச்சானும்.

directors and their sons
‘ஜவான்’ படத்துக்காக ‘தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது’ பெற்ற நடிகை நயன்தாரா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com