சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின்ஸ் கிங்க்ஸி என பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் நவம்பர் 14-ம் தேதியன்று வெளியானது.
1000 கோடி, 2000 கோடி என்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், மறுதரப்போ படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களையே வைத்துவருகின்றனர்.
படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது, கத்திக்கிட்டே இருக்காங்க என்ற குறை சொல்லப்பட்ட நிலையில், அதனை குறைக்கும் நடவடிக்கையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக எதிர்மறையான விமர்சனங்களே வந்துகொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் இயக்குநர்களான இரா. சரவணன், சீனு ராமசாமி உள்ளிட்டோர் சூர்யாவிற்கும், கங்குவா திரைப்படத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நந்தன் பட இயக்குநரான இரா. சரவணன் சூர்யாவிற்கும், கங்குவா திரைப்படத்திற்கும் எழுந்த மோசமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மிகப்பெரிய பதிவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “திராணி உள்ள ஒருவன் சமூகத்தில் இருக்கும் அனைத்து அநீதிகளுக்கும் கொந்தளிக்க வேண்டும் தானே என எதிர்மறையாக கடுமையாக கருத்துவைத்தவர்களை சாடியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.
ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?
வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்டுகிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படி பழகிக் கொள்கிறோம்?
நியாயமும் அறச்சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான்” என்று பதிவிட்டுள்ளார்.
உடன் இறுதியாக பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. முக்கியமாக நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல என்று கூறியுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி பதிவிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “திரைப்பட விமர்சனம் செய்வது அவரவர் சுதந்திரம், கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் திரு சூர்யா சிவகுமார் போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கங்குவா திரைப்படமானது 3 நாட்களின் முடிவில் உலகளவில் ரூ.127.64 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியா க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.