தமிழ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தி திரைப்படமான 'ஷெர்ஷா' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியான பாலிவுட் திரைப்படம் 'ஷெர்ஷா'. விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க, தமிழில் அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணு வர்தனே இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார்.
கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் திறக்காமல் இருந்ததால், படம் தயாராகி கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு பின்பு கடந்த 12-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது படக்குழு.
அமேசான் பிரைமில் வெளியான 'ஷெர்ஷா' விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் படத்துக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்றாலும், 'ஷெர்ஷா'வின் டிஜிட்டல் வெளியீடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள் பலரும், படம் பெரிய திரையில் பார்ப்பதற்கு ஏற்ற பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும். எனவே, தயாரிப்பாளர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருந்து பெரிய திரையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே, 'ஷெர்ஷா' அமேசான் பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த தகவலை இன்று அமேசான் பிரைம் பகிர்ந்திருக்கிறது.
''இந்தியாவின் 4100 சிட்டி மற்றும் டவுன்களில் இருந்தும் மற்றும் உலகம் முழுவதும் 210 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அதிகமான பார்வையாளர்கள் 'ஷெர்ஷா' படத்தை பார்த்திருக்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், ஐஎம்டிபியில் 8.9 மதிப்பீடு பெற்று மிகவும் பிரபலமான இந்திப் படம் என்ற சிறப்பையும் 'ஷெர்ஷா' பெற்றிருக்கிறது.
இதையடுத்து படத்தின் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா, "உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி" என்று இந்த தகவலை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கியாரா அத்வானி '' 'ஷெர்ஷா' படத்துக்காக நீங்கள் எங்கள் மீது பொழிந்த அன்பு, மரியாதை மற்றும் பாராட்டுக்கு நன்றி" என பதிவிட்டு இருக்கிறார்.
இதேபோல் படக்குழு ஒவ்வொருவரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா காஷ்மீர் பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை பதிவிட்டு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.