Nayanthara: Beyond The Fairytale என்ற தன் ஆவணத்திரைப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷ் குறித்து காட்டமான பதிவை நடிகை நயன்தாரா பதிவிட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவனும் இதுத்தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், வாழு வாழ விடு என்று தனுஷ் பேசிய பழைய வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அத்துடன், ‘வாழு வாழ விடு’ என்ற Caption ஐயும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இது குறித்தான பதிவில், தனுஷ் பேசிய விஷயம் என்னவெனில் “ஒருவர் மீது இருக்கும் அன்பு மற்றொருவரின் மீது வெறுப்பாக மாறக்கூடாது. அப்படி மாறினால் அந்த உணர்வுக்கு அர்த்தமே கிடையாது. இன்று உலகம் மோசமான நிலையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு எதிர்மறையான எண்ணங்கள்... யாருக்கும் யாரும் நன்றாக இருப்பதே பிடிக்கவில்லை.. வாழுங்கள் வாழவிடுங்கள். யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது.
ஒருத்தரை பிடித்திருந்தால் அவரை கொண்டாடுங்கள் இல்லையெனில், விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இது பெரிய ராஜதந்திரம் கிடையாது” என்றுள்ளார்.
முன்னதாக, விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை என்பது தொடர்பான சில விஷயங்களை அறிக்கை வழியாக பகிர்ந்திருந்த நயன்தாரா, ‘நானும் ரௌடிதான் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது’ என்று தெரிவித்திருந்தார்.