”காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படவில்லை..”- அமரன் குறித்து இயக்குநர் வசந்தபாலன் வைத்த விமர்சனம்!

அமரன் திரைப்படத்தில் காஷ்மீரின் அரசியலும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழலும் பேசப்படவில்லை என்று இயக்குநர் வசந்தபாலன் விமர்சித்துள்ளார்.
வசந்தபாலன் - அமரன்
வசந்தபாலன் - அமரன்PT
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

amaran
amaran

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவும், காட்சிப்படுத்தவும் தவறியிருப்பதை இயக்குநர் வசந்தபாலன் விமர்சித்துள்ளார்.

amaran
amaran

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா ‘காஷ்மீரில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது போல் அமரன் காட்சிப்படுத்தியுள்ளது’ என்று விமர்சித்திருந்த நிலையில், இயக்குநர் வசந்தபாலனும் விமர்சித்துள்ளார்.

வசந்தபாலன் - அமரன்
”ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை களங்கப்படுத்தும் அமரன்..” - மிக கடுமையாக விமர்சித்த ஜவாஹிருல்லா!

காஷ்மீரின் அரசியல், சூழல் பேசப்படவில்லை..

அமரன் திரைப்படம் குறித்து சமூகவலைதளத்தில் பேசியிருக்கும் இயக்குநர் வசந்தபாலன், “ராணுவம் மற்றும் யுத்தம் சம்மந்தமான திரைப்படங்களைக் காண்பது எனக்கு பெரும் அயர்ச்சியையும் மனசோர்வையும் தரும். கொத்து கொத்தான மரணங்களையும், வெடிகுண்டு வெடித்து மனித உடல் துண்டாவதையும் படம் முழுக்க காண்பது வாழ்க்கை குறித்த பயத்தை அதிகரிக்கும். ஆகவே அதை காண்பதை தவிர்ப்பேன்.விமர்சனரீதியாக மரியாதைக்குரிய திரைப்படமாக மாறினால் மட்டுமே மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க முயல்வேன்.

அமரன்
அமரன்

காஷ்மீர் தீவிரவாதம் குறித்த ராணுவத் திரைப்படங்களில் அங்கு உண்மையாக நிலவும் காஷ்மீர் அரசியலை பேசாமலே அல்லது ஒரு சார்பாக பேசியே திரைப்படங்கள் கடந்து போகிறது என்கிற வருத்தமும் எழும். அரசியலைப் பேசிய ஒன்றிரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பெரும் கவனம் பெறாமலே போய் விட்டன.

சென்றாண்டு காஷ்மீருக்கு படப்பிடிப்பு சென்ற சில தினங்களில் ஆப்பிளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் ஆப்பிள் பயிரிடும் விவசாயிகள் திண்டாடுவதை அறிந்தேன். இப்படி காஷ்மீர் பற்றிய பல கேள்விகள் மனதில் சுழன்றடித்தவண்ணம் இருக்கின்றன.

அமரன்
அமரன்

அதனால் அமரன் திரைப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அந்த திரைப்படத்தைக் காணவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உருவாகாமலே இருந்தது. முன்னோட்டம் சிறப்பாக இருந்தது இருப்பினும் என் முதல் சாய்ஸ் அமரன் இல்லை என்கிற முடிவோடு தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டேன்.

தீபாவளி அன்று காலையில் இருந்தே அமரன் பற்றிய நல்லவிதமான விமர்சனங்கள் என்னைச் சுற்றி பட்டாசாக வெடித்தவண்ணம் இருந்தது, பார்க்கலாமே என்று முயற்சித்தால் ஞாயிறு வரை முன்பதிவிலே அத்தனை காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

நேற்று தான் சென்னை வந்து அமரன் படத்தைப் பார்த்தேன். காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலே தான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே” என்று எழுதியுள்ளார்.

வசந்தபாலன் - அமரன்
‘ஒருத்தர இப்படியா பண்ணுவீங்க..’ Amaran திரைப்படத்தால் தூக்கத்தை இழந்த மாணவர்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com